பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161


தன்னந்தனியே அடைபட்டுக் கிடக்க ஏலுமா?...நான் சொல்றேன் பாரு!-அந்தப் பய மவன்-மாயாண்டி நிஜமாகவே ரோசக்காரனாயிருந்தா இம்மா நேரம் களுத்திலே தூக்குக் கயிற்றை மாட்டிக்கிட்டிருக்கனும்!..ஆ! இப்போ நெனச்சாக்கூட மனசு திகிலப்படுதே? போன கிளமை நம்ப கண்ணுலப்பந்தலிலே கூட துணிஞ்சு இரக்கப்படாம தீ வச்சுப்பிட்டானே?.....தெய்வம் நின்னு கொல்லுமுன்னு பெரியவங்க- நாலும் அறிஞ்சவுங்க சொல்லுறதுண்டு. வரட்டும்”

“மச்சான், நல்ல நாளும் பெரிய நாளுமா நீங்க எதுக்கு இப்ப அந்தப் பாவியைப் பத்தி மனசிலே நெனக்கறீங்க? முறைப் பொண்ணு குறிதவறிப் போயிடுச்சேன்னு ஆத்திரம் அவனுக்கு!”

“கட்டாணி முத்தே! ஒன்னே நான் எப்பவும் மறக்கவே மாட்டேன். அந்த நாளிலே நாம்ப ரெண்டு பேரும் நாவ மரத்தடியிலே ராக்காச்சி அம்மன் பொட்டலிலே நின்னு கையடிச்சுச் சத்தியம் செஞ்சிக்கிணமே, அதை நீ காப்பாதிட்டே. அது போதும்."

"அத்தான் வேறே பேச்சு பேசமாட்டீங்களா?”

“ஒ...!” என்று உத்தாரம் சொன்னன் உரிமை பூண்டவன். அவன் கண்களிலே மோடி கிறுக்கியது.

ஒலைக் குடிசையைப் பிய்த்துக்கொண்டு காற்று வீசத் தொடங்கியது. முல்லைச் சிரிப்பிரும்பிக் கொண்டிருந்த தாரகைகள் மண் குடிசையை வசந்த மண்டபமாக ஆக்கிக் கொண்டிருந்தன.

ஜோடிப் பெருமூக்சு அனற் காற்று.

கொட்டா மணக்கெண்ணெய் அகல் விளக்கை அணைக்க இரு உயிர்கள் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தன.