15
சங்கிலி தெம்பை வரவழைத்துக்கொண்டு கடமை புரிந்தான். சாயா கிளாஸ்கள் கைமாறின; சில்லறைக் காசுகள் சட்டைப் பையில் புரண்டன; அடிவயிற்றில் பசி புரண்டது. கண்கள் இருண்டுவந்தன. "பாட்டுப் புத்தகம் பத்துக் காசு!...பாட்டுப் புத்தகம் பத்துப் பைசா!..."
தரை மகா ஜனங்களிடமிருந்து விடை வாங்கிக் கொண்டு, பெஞ்சுகளுக்கு மத்தியில் 'டார்வின் தியரி' படித்துக் கடைசியாக நாற்காலிகளை நாடின வேளையில், பாட்டுப் புத்தகங்களுக்குக் கிராக்கி தட்டவே, உன்னிப்பான பார்வையை நெடுகிலும் ஓடவிட்டவாறு, நடந்தான். காசுகளை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுவிட்டு, புத்தகங்களை நீட்டிச் சென்றான்.
அடுத்த வரிசைக்குத் திரும்பின் தருணம் சங்கிலியின் பார்வையில் பட்டு விலகினர் இருவர்; ஒருவர்-திருவாளர் சகடயோகம்; அடுத்தது, அவரது 'தர்மபத்தினி!'
ஒரு கணம் கொதிப்பு பொங்கியது.
மீண்டும் குரல்கள் மீட்டின. "ஏ...பாட்டு புத்தகம்...வா...வா!"
சில்லறைகள் மொத்தமாக விழுந்தன்.
"இந்தாப்பா... இங்கே ஒண்ணு கொடு!" என்று கேட்டுக்கொண்டே பத்துக்காசை நீட்டினார் சகடயோகம்; தூரத்தே கும்பிட்டவனைக் சிரிப்பால் வாழ்த்தினார்.
சங்கிலியின் கைகள் அந்தப் பத்துக் காசை ஏந்திக் கொண்டு, சட்டைப் பைக்குள் திணித்தன. ஆனால், அவன் பாட்டுப் புத்தகத்தை நீட்டவில்லை!
தர்ம பத்தினியின் நச்சரிப்பைத் தாங்காத சகடயோகம், அங்கவஸ்திரத்தை நகர்த்திப் போட்டபடி, "எங்கேப்பா பாட்டுப் புத்தகம்?..." என்று வினா கொடுத்தார்.