பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193


வாசலில் இரட்டை மாட்டு வண்டி ஒன்று வந்து தேங்கியது.

“அம்மா!”

கண் நிமிர்த்தி, நோக்கை நிமிர்த்தி விட்டாள் கல்யாணி அம்மாள். கையில் சாவிக் கொத்துக் குலுங்கியது. முந்திரிப்பருப்புத்துணுக்குகள் பற்களுக்கிடையே நசுங்கிச் சுவை காட்டின.

வாசற்புறத்தே ஆசாரி சிங்காரம் நின்றான்.

‘இவருக்குத்தான் நகை செஞ்ச கூலி அவ்வளவையும் அணா பைசா பாக்கி வைக்காம குடுத்துப்பிட்டேன்?...அப்பாலே, ஏதுக்கு இப்ப மறுபடியும் வந்திருக்காராம்...?’

தவழ்ந்து வந்த கேள்விக்குத் தக்க விடை தவழ்ந்து வந்தது!

சிங்காரத்தின் துணைகொண்டு கடந்து வந்த, ‘அந்த உருவம்’ அவளுடைய கண் நோக்கில் தென்பட்டதுதான் தாமதம்; அவளது தலை ‘தலையாட்டிப் பொம்மை’ ஆனது. “...இந்த ஆண்ட பெருமாள் ஆசாரி இத்தனை காலங் கழித்து இப்போ இங்கே ஏன் வந்திருக்கார்?...’ வினாவின் சுழிப்பில் விதிச்சுழல் நிழலாடியதா?

குடும்பச் சொந்தம் கட்டு விட்டுப்போகாமல் இருக்க வேண்டி, கல்யாணியை அவளின் மாமன் முறைமை கொண்ட சோமசேகரனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதாக, இரு தரப்புப் பெற்றாேர்களிடையிலும் கடந்த பேச்சு வார்த்தைகளின் பேரில், ஒரு முடிவு நிர்ணயம் ஆயிற்று! மாப்பிள்ளை வீட்டினர் குல வழக்கத்தை ஒட்டி, ‘முகூர்த்தத்தாலி’ செய்து, மணவறையில் வைக்கவேண்டும். அவ்வாறே தாலி செய்வதற்கு, அப்போது நற்கியாதி பூத்து விளங்கிய ஆண்ட பெருமாள், வெற்றிலை பாக்குக் காணிக்கை முதலியன வைத்தார்கள்.