பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

அவர் கைராசி வாய்க்கப் பெற்றவர் என்பது ஏகப் பிரசித்தம் ஆனால், விவாக தினத்துக்கு முந்திய நாள், உருக்கப்பட்ட தங்கக் கட்டியைத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டார் ஆசாரி. அதற்கப்புறம் அவரை அந்த வட்டாரத்திலேயே காணோம் இந்தப் பதினெட்டு வருஷங்களாக அவர் எங்கே அஞ்ஞாதவாசம் இருந்தாரோ?...

காம்புவிட்டு உதிரக் காத்திருக்கும் கனிந்த பழமென நின்றார் ஆண்டபெருமாள் ஆசாரி. தளர்ந்த உடல்; முதிர்ந்த நரம்புகள். நெற்றியில் விபூதிக் கோடுகள். நரை திரண்ட முடியை ‘அள்ளி முடிந்து’ விட்டிருந்தார்.

ஆசாரியைக் கண்ணுற்றதும், கல்யாணி அம்மாளுக்குத் துணுக்கென்றது. காலச் சவுக்கு அவள் நெஞ்சைத் தஞ்சமடையாமல் இருக்குமா, என்ன?

‘ஒருவேளை, இவர் கையாலே செஞ்ச தாலி எங்கழுத்திலே ஏறியிருந்தால், என்னோட அத்தான் பிழைச்சிருப்பாரோ?...என் மாங்கல்யம் பிழைச்சிருக்குமோ?...’ எண்ணம் பிறந்த பகைப்புலத்தில், தன் தாலி உருமாறிய நிகழ்ச்சியும் கோடு அமைத்து நகைத்தது! ‘என் விதி. ம்!...’

“அம்மா!”

“வாங்க, ஆசாரி ஐயா!”

முகப்பு வெளித் திண்ணையில் அமர்ந்தார் ஆண்ட பெருமாள் ஆசாரி.

தாம்பூலத் தட்டு ஓடி வந்தது.

“அம்மா என்னை மறந்திருக்க மாட்டீங்க நீங்க!.. உங்களுக்குத் தாலி செய்ய இருந்த வேளையிலே, எம் மகளுக்குப் பிரசவ வேதனை அதிகமானதாகத் தந்தி வந்திச்சு. ஆனபடியினாலே, நான் பொன்மலைக்கு ஓடிப் போயிட்டே