பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


தங்கத்தையும் நானே வாங்கிப் போட்டுப்பிட்டேனுங்க, அம்மா! இலையும் பழுப்பும் எல்லாருக்குந்தாங்க! உங்க அன்பு மனசு இந்த ஒரு காரியத்துக்கும் மறுப்புச் சொல்லிப்புடாதுங்க. உங்க வீட்டுக்காரருதானுங்க எங்களை அந்த நாளையிலே ஆதரிச்ச தெய்வம்!... நீங்க இதை மறுக்காதீங்க. அப்பதான், இத்தனை காலம். எனக்குள்ளாற வீசிக்கிட்டிருக்கிற புயல் ஓயுமுங்க!..."

தேம்பினார் ஆசாரி.

கல்யாணி அம்மாளின் சம்மதம் கிடைத்ததும், புதுப்பிறவி பெற்ற பாவனையாகச் சிரித்தார் ஆசாரி. உந்திக்கமலம் வெளியேற்றிய சிரிப்பு அது! நீட்டிய காப்பியை நிறைவோடு குடித்தார் அவர்; தாம்பூலம் தரித்துக் கொண்டார்.

'எங்கையினாலே உங்களுக்குத் தாலிப் பொட்டு செஞ்சு கொடுத்திருந்தாக்க, ஒரு சமயம், உங்களோட தாலி நிலைச்சாலும் நிலைச்சிருக்குமோ?... நான் எங்ககடமையைச் செய்யாததற்கும், உங்க அவலக் கோலத்தை நான் கண்டதுக்கும் ஊடாலே என்னாலே இப்படித்தானுங்க ஒரு ஆறுதல் வழியை உண்டாக்கிட முடிஞ்சது, தாயே! ஊம்!... வாழ்க்கை ஒரு நாடகமாகத்தான் இருக்குது. வாழ்ந்து நொடிச்ச குடும்பத்தைக் காணவே ஆறமாட்டேங்குதே... அம்மா வீட்டை அடமானம் வச்சு, மகள் கல்யாணச் செலவைச் செய்ய இருந்திருக்காங்க. அந்தச் சேதி கிடைச்சடியும், அதுக்கும் நானே ஒரு வழியை உண்டாக்கி, திரை மறைவிலே ஒரு உபகாரம் செஞ்சுப்புட்டேன். சோமசேகரம் ஐயா குடும்பத்துக்கு ஆபத்துக்கு உதவாத என்னோட நிலபுலம் இருந்தென்ன?... பட்டினத்தார் பாடின மாதிரி, நடுவிலே வந்த சிவன் தந்த சொத்து இப்படிப்பட்ட சுபகாரியத்துக்கு உதவுகிறதே என் மனசுக்கு ஆறுதல் தரும்! ஈசனே, எல்லாம் நீ காட்டுற நல்ல பாதைதான்!...'