பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மேடு பள்ளங்களுக்கென அமைந்த அல்லது, அமைத்துக் கொண்ட அடையாள முத்திரையோ, என்னவோ?

அவள்-பார்வதி. வாத்தியாரம்மா.

“டீச்சர்...டீச்சர்!”

பிஞ்சின் குரல் கேட்கவே அவள் விசை சேர்த்துத் திரும்பினாள். பத்மினி நின்று கொண்டிருந்தாள். சிறுமி இந்தப் பெயருக்கு ஒரு ‘மவுஸ்’ உண்டல்லவா? அவளது முல்லையரும்பு விரல்களைப் பற்றிக்கொண்டு, சிறு வயசுக்காரர். ஒருவர் நின்று கொண்டிருந்தார். கீரமங்கலத்தில் நல்ல புள்ளி. பஞ்சாயத்து சபையின் அங்கத்தினர். மத்தியானம் வீட்டில் ஏதோ விசேஷமாம், மகளுக்கு வீவு வேண்டுமாம். சிரிப்புக் காட்டி, பத்மினியைச் சிரிக்கச் செய்து, அனுமதி ஈந்தாள் ஆசிரியை.

பள்ளிக்கூடத்திலிருந்து மறுகி கடந்து, போலீஸ் ஸ்டேஷனில் திரும்பி, மேலத் தெருவுக்கு அவள் வந்து சேருவதற்குள் அரைமணி ஆகும். நின்றது நின்றபடியே, அவள் தன் வீட்டினை அடைந்துவிட்டாள். ‘பேபி இந்நேரம் தூங்கி விழிச்சிக்கிட்டிருக்கும். பால் புட்டியிலே இருக்கிற பாலை ‘அவங்க’ கொடுத்திருப்பாங்க...’ எண்ணங்களின் மருக்கொழுந்து மணத்தில், ‘இறந்தகாலம்’ நெடி கூட்டிக்கிறக்கம் கண்டது. அந்தக் கிறக்கம்தான் வாழ்வா? கிறக்கம் தெளிந்ததும், தன் இடது கால் பாதத்தைக் குனிந்து பார்த்தாள் அவள். ஈரம் பெய்தது. இமை நெடுகிலும்.

படிக்கட்டுக்களைக் கடந்து இறங்கினாள். அவள் ‘ப்யூன்’ கொடுத்த உறைக்கடிதம் அவளுள் சாட்டை சொடுக்கியது. ‘ஐயோ, நான் இப்ப என்ன செய்வேன்?... புதுச் சோதனையாயிருக்கே?...’ மேனி அல்லாடியது. கண்ணீர் வழிந்தது.