பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


புருஷனுக்குச் சாதம் படைத்தாள் அவள். குழந்தையைத் தொட்டிலில் இட்டாள். சாப்பிட்டேன் என்று ‘பேர்பண்ண’ அவளும் இரு கவளம் சோறு பிசைந்து விழுங்கினாள். ஸ்கூலுக்குப் போய் மாலையில் வீடு திரும்பு கையில் அவளுடன் அழுத்தப் பிடித்தாட்டிய தலைவலியையும் அழைத்து வந்தாள். கண்ணாடி வளையல்கள் கல கலத்தன!

எப்படியோ இரவு மனை மிதித்தது. இரவின் பிறை நிலா வான வீதியில் நட்சத்திரத் தோழர்―தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தது.

பார்வதிக்கு உறக்கம் கொள்ளவில்லை.

சுந்தரம் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்து விட்டிருக்தான். வெளிறிப் போயிருந்த நெற்றித் திட்டில் சுருள் முடிகள் சில இழைந்திருந்தன. அவள் பார்வையில் ஓட்டை சைக்கிள் பட்டது. அவள் அலுவல் புரியும் இதே பள்ளியில்தான் சுந்தரம் ‘ட்ரில் மாஸ்டர்’அறந்தாங்கியில் பொங்கலன்று நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் அவன் தன்னுடைய இடது காலை இழக்க நேரிட்டது. அவன் எடுத்தது மறுபிறப்புத்தான். பிறந்த மனையும் புகுந்த வீடும் வசதியிழந்த நிலையிலே, அவள் பட்ட கஷ்டநஷ்டங்கள் கொஞ்சமா, நஞ்சமா? வரும் விதி இராத்தங்காது என்பார்கள் பெரியவர்கள்!...

தலைக்கு அணை வைத்துப் படுத்தாள் பார்வதி. லேசாகச் சிணுங்கிய பேபியைத் தடவி அமைதிப் படுத்தினாள். ஜன்னல் கம்பிகளுக்குத் தெரியாமல் நழுவி விழுந்த ஒளிக்கற்றைகளின் முத்து நகையில் கடிதமொன்று தெரிந்தது. லாந்தரை நகர்த்தினாள் தூண்டினாள். தூண்டுகோல் கிடைத்தால் கடிதம் வாய்திறக்காமல் இருக்குமா?