பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

மென்று தின்று கொண்டிருந்த செவலைக் காளையையும் வெள்ளைக் காளையையும் அன்போடு தட்டிக் கொடுத்து விட்டுத் திரும்பினார்.

சுருக்கங்கள் பின்னல் கோலாட்டம் விளையாடிக் கொண்டிருந்த சேர்வையின் முகம் சிரிப்பை ஏந்தித் திகழ்ந்தது. உதடுகளிடைப் பிறந்த மென்முறுவல் அடர்ந்து படர்ந்து நரையோடிய மீசைக்கரையில் ஒய்வு கண்டது. “வாங்க, அத்தான்! திண்ணையிலே குந்துங்க!” என்று முகமன் கூறிய திருவம்பலம், தோளில் கிடந்த துண்டை எடுத்துத் திண்ணையில் விசிறினார்.

“மச்சான், நீயும் குந்து. மகசூல் எல்லாம் எப்படிக் கண்டிருக்கு?” என்று அன்போடு கேட்டார் வேலாயுதஞ் சேர்வை.

“தாராடி சாமி கிருபையாலே எல்லாம் நல்லபடியாகவே கிடைச்சிருக்குங்க, அத்தான். ஆமா, உங்க கண்டு முதல் முடிஞ்சிருக்குமே?...ஐந்நூறு கலம் காணுமில்லே!”

“ஓ!...அதுக்கு மிஞ்சியே கிடைச்சிருக்குது!”

அத்தானின் இதய கிறைவு மச்சானின் முகத்திரையில் பிரதிபலித்தது. ‘தங்கச்சிக்குப் பரணி நட்சத்திரம். அது தரணியாளு மிங்கறது. மெய்யாகாம இருக்கமுடியுமா?’ என்று நினைத்துப் பூரித்தது திருவம்பலச்சேர்வையின் கருணை ததும்பும் உள்ளம்.

இருள் வாசலில் கின்றது.

தீபம் திண்ணைக்கு வந்தது.

இரண்டு குவளைகளிலே நீர் நிரப்பிக் கொணர்ந்தார்கள் வள்ளியும் தேவானையும், கைவளைகள் ‘கலகல’வென இன்பப் பண் பாடின.