பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


இக்காட்சியைக் கண்டு மனத்துள் சிரித்துக்கொண்டாள் தேவானை; ஆனாலும் அவளுடைய வதனத்தில் கலவரத்தின் சன்னமான இழைகள் பல கோணங்களில் பின்னிக்கிடந்தன; “மச்சானே எங்கே காணோம்?”

“வள்ளி அக்கா, ஏன் திரும்பிட்டே?.மச்சானைத் தானே அப்பா அழைச்சாங்க போலிருக்குது!...” என்று தேவானை சொல்லி இன்னும் வாய் மூடவில்லை.

நாடகத்தில் வரும் ராஜபார்ட்காரன் போல வந்து நின்றான் முருகன். “தேவானை...!வள்ளி...” என்று குரல் கொடுத்தான் அவன்.

“அக்கா, இந்தாப் பார்த்தியா நம்ப மச்சானை!” என்று சின்னக்குழந்தையைப் போலக் குழைந்து கொண்டே ஓடிவந்தாள் தேவானை.

வள்ளியின் கண்களிலே அணைந்திருந்த ஏமாற்றம் பையப்பைய விடை பெற்றுக்கொண்டிருந்தது. “கொஞ்ச முந்தி நீங்க உள்ளே இருந்தீங்களா, மச்சான்?” என்று ஆவலோடு வினவினாள் வள்ளி.

‘ம்’ கொட்டினான் முருகன். அவன் கண்கள் வள்ளி ― தேவானை; சகோதரிகள் இருவரை மாறி மாறிப் பார்த்தன. .

“தேவானை இந்த பூ!...”

“வள்ளி இது உனக்கு!”

பூவையர் இருவரும் பரிசுப்பொருள்களான பூச்சரங்களின் மனத்தில் லயிக்கத் தொடங்கினர்.

“ஆசை மச்சான்!” என்று அன்போடு பாராட்டினாள் வள்ளி.

“நேச மச்சான்!” என்று வாயாறப் புகழ்ந்தாள் தேவானை.