பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சிரிப்பினிலே ஆர்வக் கனலின் இருமனம் பேசியது; நேசம் மறக்காத நெஞ்சுகளின் இணைகுரல் தந்தது; தோன்றாமல் தோன்றி ― மறையாமல் மறைந்து கண்பொத்தி விளையாடும் காதற்கனவுகள் ஏடு விரிந்தன; உள்ளத்தின் எழிலும் உருவத்தின் அழகும் ‘அக்கா ― தங்கச்சி’ என்கின்ற பாசத்தின் பிடிப்பில் பூவிரல்களைப் பிணைத்துக் கொண்டு துள்ளிக் குதித்து ‘உப்புக்கோடு’ விளையாடின! முருகனின் இதயத் தளத்தை அடைத்திருந்த பெருமூச்சு வெளிப்போந்தது. நெடு மூச்சுக்கு இதயம் இருந்தால்; பேசத் தெரிந்தால், அவை தெரிவிக்கக்கூடிய பெயர்கள் இவைதாம், ‘வள்ளி தேவானை!’

முருகன் மண்ணில் நின்றான். ஆனால் அவன் கண்கள் விண்ணைக் காட்டின. எண்ணங்கள் உயர்ந்தால், இதயம் உயர்கிறது; கனவுகள் வாழும் சமயத்தில் மனித மனமும் வாழ்கிறது. இத்தகைய இயற்கை பின்னணியில்தான் மண்ணும் விண்ணும் ‘கழற்சிக்காய்’ ஆடின.

உருமப் பொழுது உருண்டு வந்தது.

“ஏலே முருகா! சோறு உண்ண வாப்பா. வட்டி களுவிப் போட்டிருக்கேன்!”

முருகன் விழிகளை மூடி முடித் திறந்தான். கனவுகளின் நிழல்கள் விலகி விலகித் தெரிந்தன. சிந்தனைச் சுழல்கள் தோன்றி மறைந்தன.

“இந்தாலே வாரேன் ஆத்தா!”

உணவு கொண்டு எழுந்தான் முருகன். தந்தை வந்தார்; விரிந்த குடையை மடக்காமலேயே கொணர்ந்த செய்தியை அவிழ்த்தார்.

“ஏலே முருகா ஒன் அம்மான் பொண்ணுங்க ரெண்டுபேரு சாதகமும் ஒனக்குக் கச்சிதமாப் பொருந்தியிருக்குதாம். ஆனா அந்தப் பொண்ணுங்களிலே நீ