பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

யாரைக் கொண்டுகிடப் போறியாம்?...மூத்ததையா? இல்லே, பிந்தியதையா? உடனே முடிவு சொல்லிப்பிடு.’,

இரு மனத்துள் ஒரு மனம் சுற்றியது; ஆலவட்டம் ஆடியது.

“நாளைக்கு மறுநாளு நிச்சயம் சொல்லிப்பிடறேனுங்க, அப்பா!” என்றான் முருகன்.

வெள்ளை நிலாவின் இதயம் கார்முகில்தானே? ஆம்; அவ்வாறுதான் இருக்கவேண்டும். இல்லையெனில் அவை இரண்டும் ஏன் அப்படி அந்தரங்கம் பேசிக்கொள்ளப் போகின்றன?

வேயப்பட்டிருந்த வைக்கோலின் மணம் வள்ளியின் நாசியில் புகுந்தது. ஒட்டுத் திண்ணையை ஒட்டிச் சாய்ந்திருந்த ‘முறிமேனி'யைத் தள்ளிக்கொண்டாள். சூடிய செவ்வந்திப் பூவின் வாசம் நெஞ்சுக்கு இதமும் சுகமும் தந்தது.

‘ம்.மே...’

வெள்ளைப் பசுவின் கன்று கத்தி அழைத்தது.

வள்ளி திரும்பினாள். அந்தக் கன்று தன்னுடைய மணிக்கரங்களிலே பிஞ்சுக் குழந்தை ஒன்றைக் கொடுத்து வேடிக்கைக் காட்டிய அந்தக் கற்பனைப் பின்னலை இப்போது நினைத்தாள். ‘மச்சானும் நானும் வாய் ஓயாமல் பேசிக்கினு இருப்போம்; வெத்திலைச் சருகுக் குட்டாலும் கையுமா நாங்க ரெண்டு பேரும் தாழ்வாரத்திலே குந்திக்கிட்டு இருக்கிறப்ப, புள்ளே சத்தம் காட்டும்; அவுக என்னை நையாண்டி செஞ்சு அடுப்படிக்கு அனுப்புவாக, யாரு கண்டாக!... ஒளிஞ்சிருந்து ஓடியாந்து பார்த்திடுவாகளோன்னு எனக்குச் சம்சயம் தட்டும். பாவம், எங்க ராசாவையோ இல்லே ராசாத்தியையோ இதுக்காவ அளுவவாவிடுவேன்?..ஊகூம்; மாட்டேன்...’