பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


உணவு வட்டில் அன்னம் ஏந்தியிருந்தது. ஆனால், இந்தப் பெண் மனமோ முருகனைத் தேடியலைந்து கொண்டிருந்தது. “மச்சான், நான் இளையவள்னு சொல்லி என்னை ஒதுக்கிப்புடுவீகளா?...எங்கையாலே ஆக்கிப் படைச்சு சந்தோஷப்படலாம்னு கூத்தாடிக் கொண்டிருக்தேனே?... அந்தக் கனா பலிக்குமில்லே? பூவத்தக்குடி காளியம்மன் தேரோட்டத்துக்கு கூண்டு வண்டியிலே என்னையும் குந்தவச்சு ஓட்டிக்கிணுப்போறதா ஒருவாட்டி நெனைப்பூட்டினீங்களே?...வேலங்குடிச் செட்டித் தெருவிலே பயாஸ்கோப்பு ஆட்டத்துக்கும் என்னை அழைச்சிக்கிட்டுப் போறதாச் சொன்னீங்களே?...மச்சான் ஆள வந்த தெய்வமாச்சே நீங்க!...”

தேவானையின் கெண்டை விழிகள் கண்ணீரிலே நீந்தின. மூடிக்கொண்ட கண்கள் மூடியவாறே இருந்தன. தவம் இயற்றினாளோ?...கங்கைக் கரைதனிலே தவம் இருந்த காமாட்சியம்மனைக் கைதட்டிக் கூவி அழைத்தனளோ? வேறு என்ன மாயம்தான் செய்தாளோ?

“தங்கச்சி!...”

தேவானையின் தவம் கலைக்கப்பட்டது. திறக்கப்பட்ட விழி விரிப்பிலே விரக்தி வரிக் கோடுகள் காணப்பட்டன. வேதனையின் சூடும் அதில் அனல் வாடையை உண்டாக்கி விட்டது. ஏறிட்டுப் பார்த்தாள். மூச்சுக்கு முந்நூறு தடவை ‘அக்கா!...வள்ளி அக்கா!’ என்று வாய் நிறையக் கூப்பிட்ட அவள் ஏன் இப்படி வாயடைத்துப் போய்விட்டாள்?...

“தேவானை! முதலில் உருட்டின சோத்தை வாயிலே போட்டுக்கத் தங்கச்சி!”

விரக்தியும் வேதனையும் நினைத்த மாத்திரத்திலே புன்னகையை அணிந்து கொள்வதென்பது இயலாத செயல்! சுலபமான காரியமல்ல!
ஆ 3