பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


“அக்கா! ...”

உந்திக் கமலத்தில் ஒலித்த பாசத்தின் இதயக்குரல் இது. ஆனால் தேவானையின் ஊனக் கண்கள் புனைந்து காட்டிய அக்காட்சியை அவள் எங்ஙனம் நினைக்காமல் இருப்பாள்? பாவம்!... அரசாணிப்பானை, காட விளக்கு, ஓமத் தீ―ஆகியவை சாட்சி சொல்ல வள்ளியும் முருகனும் மணவறையில் கணவன் மனைவியாகத் தரிசனம் தந்தனர்!

“அக்கா!”

உடன்பிறந்தாள் ஒருமுறை விம்மினாள். சோற்றுப் பருக்கைகள் சிதறின.

கொண்டவருக்குச் சாதம் பறிமாறச் சென்று திரும்பினாள் தாயார் வீராயி.

“தேவானை! நான் மூத்தவள் எங்கிற உரிமையை முன்னே வச்சு நம்ப மச்சானை என் கைக்குள்ளே போட்டுக்கிட மாட்டேன். நம்ப குலதெய்வம் பேரிலே ஆணை வச்சுப் பேசறதாக்கல் இது. எனக்குக்கூட உட்கார ஓடலே; ஏந்திருக்க ஓடலே!...நீ வீணுக்கு மனசை உளப்பிக்கிடாதே!..மச்சான் சொல்லப்போற சொல்லுதான் நமக்கு வேதவாக்கு!...அன்னிக்கி எளுதினவன் இன்னிக்கு அளிச்சு எளுதப் போறதில்லே. நம்ப விதிப்படி நடக்கட்டும்! அதுக்காவ, நம்ப பாசம் முறிஞ்சிப்பிடாம நம்பளை நாமே காப்பத்திக்கிடனும். இதை மட்டுக்கும் முந்தானையிலே முடிபோட்டு வச்சுக்கிடு.”

பெற்றவளின் நெஞ்சம் அழுதது.

பொங்கலுக்கு முருகன் உடுத்திய கோடி வேட்டியின் ஒரத்தில் அப்பப்பட்டிருந்த மஞ்சள் இன்னமும் நிறம் மாறவில்லை. அதேமாதிரிதான் அந்திமாலையின் வண்ணத்திலும் மஞ்சள் நிறக்கதிர்கள் ஒன்றியிருந்தன.