பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


“இல்லே! நான் வரலே!”

மஞ்சிவிரட்டுப் பந்தயத்தில் எதிர்த்தரப்பில் இயக்கிய உள்ளங்கள் அவன் வரை விடுகதை எதையும் முன் வைக்கவில்லை!

விடைபெற்றுத் திரும்பும்போது அவர்கள் இருவரும் கேட்டார்கள்: “அண்ணாச்சி!...நீங்க ஒங்க கண்ணாலத்தைப் பத்தி ரோசிச்சுப் பிட்டீங்களா?...யாரைக் கட்டிக்கிடப் போறீங்க?...வள்ளியையா?...இல்லே, தேவானையையா?...”

திண்ணை முந்தலில் பிரிந்து கிடந்த செய்தித்தாளில் ‘இருதாரத் தடுப்புச் சட்டம்’ பற்றிய ‘கதை’ இருந்தது.

முருகன் விழித்தான்.

“வள்ளி தங்கமானது!” என்றான் வீரமுத்து. அவனுடைய இதழ்களிலே எத்தகைய மகிழ்ச்சி! எப்பேர்ப்பட்ட பூரிப்பு!

“தேவானை நல்ல பொண்ணு!” என்று விளக்கவுரை ஈந்தான் காளிமுத்து. கனவின் தேக்கம் அவன் கண் கடையில் வழிந்தது!

இளஞ்சிட்டுக்கள் இரண்டும் நெஞ்சில் தெரிந்தன: ‘வள்ளி!...தேவானை!’

முருகன் இப்போது இளங்காளைகளைக் கூர்ந்துபார்த்தான்.

“ஏனுங்க முருக அண்ணாச்சி!... அக்கா தங்கச்சிங்க இரண்டு பேரிலே ஒருத்தியைவிட்டு இன்னொருத்தியைக் கொண்டு கிட்டீகண்ணா, அவுக அவுக மனசு நோவாதா?”

முருகன் மனம் அதிர்ந்தான். அடுத்தகணம், அற்புதமான ஒரு முடிவுக்கு வந்தவனப் போல் பளிச்சென்று தோற்றமளித்தான்.