பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

முதக் குறுமுறுவலே ஏந்தி நிற்பாள் ஏந்திழை, கன்னம் தாங்கிய கை, கள்ளம் நீங்கிய மனம் இரண்டும் ஒருருவாகக் கொண்டது போல. அண்ணாமலை எழுந்து, அவள் கன்னத்தை நெருடி மகிழ்ந்து, கையுடன் கை பிணைத்து, இதயத்துடன் இதயம் இணைத்து நடப்பார்.

அது அவர்கள் குடில். எட்டடிக் குச்சுவீடு. கஷ்டம் உணர்ந்து, காலம் கணித்து வாழ்வு நடத்தினார்கள். சிற்றப்பன் பெரியப்பன் வீட்டுச் செல்வங்கள் ‘மகாமேரு’வாக அண்டைத் திடலில் கொட்டிக் கொழித்த விவகாரங்களைப் பற்றி அவர்கள் எண்ணுவதோ ஏங்குவதோ இல்லை. “அவங்க அவங்க பொசுப்பு!” என்பார் அவர்.

வெந்நீர் விளாவி வைப்பாள். அருகில் நிற்பது தெரிந்துங்கூட “ஏலே, அண்ணாமலை வூட்டுக்காரியோ!” என்று சன்னக்குரலில் ஓர் அழுத்தம் பிடித்துக் கூப்பிட்டுச் சிரிப்பார். குளியல் முடியும். பூவையின் கரம் அவரது மேனி அனுப்புச் சலிப்பை நீக்கிவிடும். ஒரு வெட்டு வெட்டுவார் சாப்பாட்டை. ‘கவுச்சி’ என்றால் மனிதருக்கு மிகவும் விருப்பம். உண்டு முடிந்துவிட்டால், சிரிப்பும் கும்மாள முந்தான்! அப்பால்......

எல்லாம் போன சோபகிருது வருஷ நடப்பு.

கதையா இது?

ஊஹூம்!

கனவல்லவே?

அல்ல; கனவல்ல!

‘அணில் கொம்பில்; ஆமை கிணற்றில்’ என்பார்கள். அதைப்போலத்தான் இப்பொழுது அண்ணாமலையின் கதையும். சகா பாயும் படுக்கையுந்தான். நொடிக்கு நூறு மூச்சு நூறு மூச்சுக்கு முந்நூறு இருமல். சிணுங்