பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

கல் இருமல். கோழிக்கோடுச் சீமைஓட்டு வீடு. மச்சு மனை. குச்சு, திசை திரும்பிய கதை. ஓடுகளின் ‘காங்கை’யும் ‘கிருது’ம் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை; ஆனாலும் விதியின் நமட்டுச் சிரிப்பு அவரை அழ வைத்ததே!

மனிதர் இப்படியா நாரும் தோலும் ஆவார்?

‘ஏலே வள்ளியம்மை!’

கூப்பிட்ட குரல் கூடிப் பரவுமுன்பே, முன்றானை விரித்து வாழ்க்கைப்பட்டவள் இளமைச் சிரிப்பும் முதுமைக் கோலமும் தாங்கிவந்து அமர்ந்தாள். பட்டு மெத்தையில் கால்கள் உரசின.

“வரக்காபி கொஞ்சம் வச்சுத் தாங்கிறேன்!”

“ஆகட்டுமுங்க, அத்தான்!” என்று அவள் சொல்லி அடுப்படிக்குத் திரும்பி மீளும் நேரத்தில் வரக் காபி வந்து நிற்கும். சுக்கு மணம் கமழ.

ஒரு மடக்குக் குடிப்பார். மூச்சுப் போய் மூச்சு வரும்.

“இன்னிக்கு வெள்ளிக்கெளமை ஆச்சே; சாமிக்கு நம்ம ரெண்டுபேரு நட்சத்திரத்துக்கும் ஒரு அர்ச்சனை செஞ்சுக்கிட்டு வாயேன்!”

“ஆகட்டுமுங்க!” என்றாள் வள்ளியம்மை, அந்திச் சுடர்க்கதிர்களைத் தடவிக் கொடுத்த வண்ணம்.

நரைமுடிகளில் கதிரொளியின் மஞ்சள் கோலம், கோலம் பரப்பியது. அங்குல அளவுக்கு இருந்த பச்சைக் கல் மோதிரத்தை லாவகமாகத் திருப்பிப் பார்த்தபோது, அவருள் பெருமிதம் பூரித்துப் புடைத்தது. காலத்தின் ஏடுகளை புரட்டினாரோ? ஞாலத்தின் ஏடுகளைப் புரட்டினாரோ?