பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

எடுப்பிலேயே ‘செந்தில்’ பெயரை ஓதினாள் வீட்டுக்காரி. அண்ணன் குடும்பமும் தம்பி குடும்பமும் ‘சொந்தம் விட்டு’ ஒதுங்கியும் விலகியும் வாழ்ந்தாலும், செந்தில் மட்டும் வள்ளியம்மையிடம் ஒட்டிக்கொண்டான். ஒட்டிய பாசம் தழைத்தது. வள்ளியம்மைக்கு கண்ணுக்கு கண் ஆனான் செந்தில். “”இறங்கின கை நாம்ப. ஆனாலும் அதுக்காக, மண்டைக் கொண்டு திரியாம, என்னமோ ஒங்க அண்ணன் சம்சாரம் நம்ம செந்தில் பயகிட்ட இம்மாந் தொலைவு ஒட்டுதலா இருக்கிறதே, ஒரு அதிசயக் கூத்துத்தான்! மேலவட்டை செல்லத்தாச்சி மகனை அவுக அண்ணன் பெண்சாதி கரிச்சுக் கொட்டின மாதிரி இங்கே ஒண்னும் நடக்கவே நடக்காதுங்கிறதுவும் நம்ப மனசுக்கு எம்பிட்டோ சிவாவத்தான சேதி தானுங்க!” என்று கொண்டவனிடம் பரிந்துரைத்த வாசகங்களை வள்ளியம்மை அறியமாட்டாள்.

இரவு வேளைகள் தவிர, எஞ்சிய பொழுதெல்லாம் செந்தில் இந்தச் சீமை ஓட்டு வீட்டில்தான் அடைந்து கிடந்தான். “பெரிய ஆத்தா, பெரியாத்தா!” என்று ஓயாமல் அலட்டிக்கொண்டு, வள்ளியம்மையின் கொசுவத்தைத்தான் சுற்றுவான். வெற்றிலைப் பாக்கைக் கல்லுரலில் வைத்துப் பொடித்துக் கொண்டிருக்கையில் சிறுவனின் கைவிரல் அகப்பட்டு லேசாக ரத்தம் கட்டி நசுங்கியதைக் கண்டதும் அவள் பட்ட பாடு அல்பமா, சொல்பமா? ‘பெறாத வயிறு’ அடைந்த இன்னல் கொஞ்சமா நஞ்சமா?

செந்தில் ஒரு முறை பனங்குளத்துக்கு விருந்துண்ணச் சென்றுவிட்டான். ஒரு வாரம் குழந்தையைக் காணாத ஏக்கம் விசுவரூபம் எடுத்தது; வள்ளியம்மையைப் பாயும் படுக்கையுமாக்கிவிட்டது. செந்திலுக்கு ஆள் அனுப்பும் அளவுக்குச் ‘சிக்கு’ மிஞ்சியது. குழந்தையின்