பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மகிழ்ந்து விளையாடிய இந்த இணையின் இன்பம் எனக்கு அளவுகடந்த ஆனந்தம் நல்கும்.

பூவைமாநகர் என்ற பெயர்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே? ஊர் பேர் தெரியாமல் இருந்த ஊர், ஊர்பேர் தெரிந்த ஊராகப் பழகிப்போய்விட்டதே! அந்த ஊரிலே பிறந்தவர்கள்தாம் பொன்னனும் பொன்னியும்.

ஆணிப் பொன் திறம் அவள்; அவனும் கூடத்தான். ரதியும் மன்மதனும் அவர்கள் முன் தோன்றியது கிடையாது. ஆனாலும், நாலுபேர் அவர்களைப் பார்க்கும் போது சொல்லிக்கொள்வார்கள், “பொன்னியும் பொன்னனும் போலத்தான் அந்த ரதியும் மன்மதனும் இருப்பார்கள் போலிருக்கிறது,” என்று. அளவெடுத்துச் செதுக்கிய ஆண் ― பெண் சிலைகளையும் மிஞ்சிவிடும் அழகு கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட காதலர்களை எனக்குக் கண்டால் கொள்ளை மகிழ்ச்சி ஏற்படும். ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா?’ என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். என் இதயம், அல்லது என் மனத்திலுள்ள பொருள் அவர்களுக்கும் புரியுமோ, என்னவோ? உடனே ‘களுச்’கென்று சிரிப்பார்கள். என் சலசலப்பை மறந்து நோக்குவேன். செந்தாமரை மலரை நாடி ரீங்காரப் பண் பாடிவரும் வண்டின் தரிசனம்தான் எனக்குக் கிட்டும்.

உதயத்தின் தங்கரேக்கு நிறம் அவர்கள் மேனிகளில் பல்லாங்குழி விளையாடும். நிலவின் கீற்றுக்களின் இடைவெளியே இடைச் செருகல் கவி, மாதிரி பால் வெள்ளம் பாய்ந்தோடும். அந்திசந்தி எப்போதும் அவர்கள் என்னைக் கண்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று கணத்திருப்பார்கள், பாவம்!