பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


“அத்தான், என்னை மறந்து விட்டீர்களா?”

“எப்படி மறப்பேன்?”

“பின், ஏன் என்னைத் தேடி வரவில்லை?”

“நான் எங்கு வந்து உங்களைக் காண்பது?”

“நான் உங்களைக் கண்டு கொண்டேனே?”

“வாஸ்தவத்தான்!”

“ஒன்று சொல்கிறேன்...”

“சொல், பூவிழி!”

“உங்களுக்குப் பூலோகத்தின் நினைவு நெஞ்சில் எட்டிப் பார்க்கிறதா?”

“இ...இல்...இல்லே!”

“தடுமாறுகிறீர்களே!”

“நான் அல்ல; என் உதடுகள்!”

“ஏன்?”

“காற்றில் அழுத்தமும் சீதளத்தின் தண்மையும் உதடுகளே ஆட்டுவிக்கின்றன.”

அவளுடைய மென்னகைக்கு அவசரச் சிரிப்பு பின்னணி அமைத்தது.

“அத்தான், பல வருஷமாக நான் உயிரற்ற உடலாக உலவி வந்தேன்; இன்றைக்குத் தான் இந்த உடலில் உயிர் ஒட்டியிருக்கிறது. என்னுடைய முதற் காதல் பலித்த புனித நாள் இது!”

“ஒரு திருத்தம் அன்பே!”

“என்ன?”

“அச்சம் தவிர். ‘என்னுடைய’ என்று சொல்லி சுய கலக்காரியாக ஆகிவிடாதே. ‘நம்முடைய’ என்று சொல் கண்ணே!”