பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


கள் எல்லோரும் போய் விட்டார்களே, மதலையை மறந்து...! ஒரு சொட்டுக் கண்ணீருக்குக் கூடப் பஞ்சமாகி விட்டதே? சே, பாழ் உலகம்! இதயமிழந்த பாவிகள்!"

இமயவல்லியின் இமைபாவா - விழிகளிலே கோபம் கொந்தளித்தது.

"உமையவளே! சினம் தவிர். பூலோகம் விசித்திரமானது- அது நம் இருவருக்கும் புரியாததல்லவே? குழந்தையைக் கண்டவர்கள் வறிதே சென்றார்களல்லவா? அப்போது, அவர்கள் உதடுகள் உதிர்த்தத் தீர்ப்பை மறுமுறையும் நினைத்துப்பார்: "ம்....! யார் பெற்ற குழந்தையோ? நமக்கு எதற்கு இந்த வம்பு? எல்லாம் இதன் தலை விதிப்படித்தானே நடக்கும்?" என்று சொல்லிப் பயந்தோடி விட்டார்களே! அர்த்தமற்ற, நெஞ்சற்ற வார்த்தைகளின் அநியாயத்தைப் பார்த்தாயா?" என்று கேள்விக் குறி எழுப்பினார் மங்கை பாகன்.

"ஆ! நெஞ்சு வெடிக்கக் கதறுகிறதே? பிறந்தது முதல் குமுறிக் குமுறி அழுகிறதே?... தேவா, குழந்தையின் முடிவு என்னாவது?" என்று கவலையுடன் வினவினாள் மாதா.

"பெற்றவளே குழந்தையைப் பற்றித் துளி கூட அக்கரைப்படாதபோது, நீ ஏன் கவலைப்பட வேண்டும். சங்கரி?" என்று வினயமாகக் கேட்டார் சுடலையாடி.

"மறுபடியும் என்னைப் பரீட்சை செய்ய ஆரம்பித்து விடாதீர்கள், பிரபோ! இந்தக் குழந்தைப் பிரச்னையை முதலில் தீருங்கள். நல்ல தீர்ப்பு நவிலுங்கள்!" என்று வேண்டிக் கொண்டாள் காமக்கோட்டி.

"ஆகட்டும். நீவீணே பதட்டப் படாதே" - ஆறுதல் மொழி தந்தார் பிஞ்ஞகன்.