பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


கோடம்பாக்கம் நெடுஞ்சாலை - கண் விழித்தது. வைகறையின் துயில் நீக்கம், அந்தச் சாலையின் அமைதி போர்த்த பாதை நெடுகிலும் பிரதிபலித்தது.

கீழே மணிச்சத்தம் கேட்டது, அதற்கு வாய்த்த பின்னணி இசையென இராஜபாளையமும் குரல் கொடுத்தது. இரு குரல்களும் பங்களாவின் கீழ்த் தளத்தைக் கடந்து மாடிப்படி ஏறிவந்தன.

அகிலாண்டம் மாடி வராந்தாக் கைபிடிச் சுவரில் சாய்ந்து நின்றவாறு, கீழே பார்த்தாள். விளக்குகள்' எரிந்தன. வேலைக்காரி சுறுசுறுப்புடன் எழுந்து, பால் பாத்திரத்தை எடுத்துக் கழுவி, தரையில் தொப்பென்று கை தவறிப் போட்டு, பின்னர் எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வெளிவாசலுக்குச் சென்றதைக் கண்ணோட்டமிட்டாள். மீண்டும் மணிச்சத்தம் தொடந்தது. பால்காரன் சைக்கிலில் பறந்திருக்கவேண்டும்!

இந்த மணி நாதம் காலப்பனி மூட்டத்தில் உருத் தெரியாமல் - உருக்காட்டாமல் தோய்ந்து பதிந்து அழுந்திவிட்ட எத்தனையோ நிகழ்ச்சிகளின் ஓலம் கபால ஓடுகளிலே 'டும், டும்' என்று மோதி எதிரொலி கிளப்பிய விந்தையை- உண்மையை. அவள் எங்ஙனம் மறக்கக் கூடும்? ஏன் மறக்கவேண்டும்?

எடுத்த எடுப்பிலேயே சுவை சொட்ட ஆரம்பமாகும் சிறு கதையை யொப்ப, சிலரது விட்ட குறை-தொட்ட குறையின் பரிணாம பலனுக்கு ஏற்ப, அவரவர்களுக்கு வாழ்க்கை சுவையுடன் அமைந்து விடுகின்றது. அத்தகைய தொரு புண்ணியத்துக்கு, அல்லது பாக்கியத்துக்கு இலக்குப் புள்ளியானவள் தான் அகிலாண்டம். அந்தஸ்த்தில் உயர்ந்தில்லாமற் போனாலும், அழகில் உயர்ந்து நின்றாள்.