உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


அவள். பேச்சிலும் பார்வையிலும் செய்கையிலும் நேரிய முறை இழைந்தது. உயர் நிலை ஆரம்பப்பள்ளிக் கூடத்தின் உபாத்தியாயர் அவள் தந்தை. தில்லை விளாகத்தில் வேலை. சைவமும் வைணவமும் ஒரே சந்நிதானத்தில் இணைப்புப் பெற்றுத் திகழும் பெருமையைக் கண் குளிரக் கண்டு பேறுபெற வந்த பெரியவர், தம் குறிக்கோளுக்கு வெற்றி காட்டிவிட்டு, அன்றைய இரவுப் பொழுதைக் கழிக்கும் சந்தர்ப்பத்தை அந்த ஆசிரியர் வீட்டில் அடைந்தார். சுற்றி. வளைந்து ஒதுங்கிக் கிடந்த சொந்தபந்தப் பாசம் பெரியவர்களின் பேச்சில் தலைகாட்டியது. யதேச்சையாகத் தலைகாட்டினாள் அகிலாண்டம். பாவாடையும் தாவணியுமாக ஓடி மறைந்தாள் அவள். ஆனால் அவளது கண்களில் தெரிந்த தெளிந்த பார்வையும், இதழ்களில் மடல விழ்ந்த தூய முறுவலும் ஓடி மறைந்திடவில்லை. பெரியவர் தம் ஒரே செல்வக் குமரன். ராமலிங்கத்துக்கு . அகிலாண்டத்தைப் பெண் கொள்ளப் பேச்சைத் துவக்கினார். 'பெரிய லட்சாதிபதியான நீங்க எங்கே? பரம ஏழையான நான் எங்கே?' என்ற வாத்தியாரின் பேச்சை மூட்டை கட்டி விட்டு, ஜாதக ஏட்டின் மூட்டையை அவிழ்த்தார். ஜாத கங்கள் பொருத்தம் தாங்கின. “எல்லாம் அம்மையப்பன் காட்டும் மெய்யன்புதான்! என் செல்வ மகள் பூர்வஜன்மத்தில் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! என்று ஆனந்தக் கண்ணீர் மல்கினார் அவர்.

பெரியவர் பட்டணத்துக்கு விடை பெற்றுப் போன நான்காம் நாள் வாசலில் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டு, ஓட்டமாக ஓடி வந்தாள் அகிலாண்டம். தந்திச் சேவகன் நின்றான். கனவுகளை விளையாட விட்ட கயல் விழிகள் கலவர மடைந்தன; சிந்தூரம் தூவிய கன்னங்களில் கறுமையின் நிழல் படர்ந்தது. பயந்து போனாள் பாவை. கடைசியில் தந்தியைக் கையொப்பம் செய்து வாங்கினாள்;