பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


கிடந்த இதயத்தைத் தொட்டது அவளது தங்கத் தாலிக் குண்டு. கண்களில் வைத்துத் தொழுதாள். அவளது விழிகளிலே தானே கார்த்திகேயன் வீற்றிருந்தான்! அச்சம் தரும்படியாக, மூச்சு முட்டித் திணறும் சத்தம் கேட்டது. அவள் உடம்பு புல்லரித்தது.

ஆந்தைக் குரல் தாவி வந்தது.

கமலாட்சிக்கு மனத்தை என்னவோ செய்தது. சிறு குழந்தை போல அழுதாள். தாயைப் பரிவுடன் நோக்கினாள். அகிலாண்டம் புகைச்சல் இருமலைக் கக்கிக் கொண்டிருந்தாள். சத்தம் வெளிவராமல், துணியைத் திணித்தாள் நேத்திரங்கள் பொங்கின.

நட்ட நடுநிசி.

"நீ தூங்கு கமலாட்சி...!"

"ஊஹூம்! நீ தூங்கு!”

“எனக்கென்ன கண்ணு! நீ சின்னஞ்சிறுசு. தூங்கம்மா. சொன்னக் கேட்டாத்தானே?”

‘முடியாது, அம்மா!’

ஹாலில் இருந்த மேஜைகள் இரண்டிலும் மருந்துக் கோப்பைகள் தயாராக இருந்தன. மூலைக்கொன்றாகப் போடப்பட்டிருந்த இரண்டு கட்டில்களுக்கும் ஊடாக இருந்த பஞ்சுமெத்தைச் சோபாவில் டாக்டர் சாய்ந்திருந்தார். எதிரே இருந்த பெஞ்சியில் நர்ஸ் குந்தியிருந்தாள்.

காலக் குழந்தை நடைவண்டி ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

தாயும் மகளும் ஒருவர்க்கொருவர் ஆதரவாக அமர்ந்து, ஒருத்தியின் முகத்தை இன்னொருத்தி பரிதாபமாகப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது, புதிய கூக்குரல் ஒன்று முழங்கியது.