பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 135

செயற்பாடு வேண்டும்

இங்ங்ணம் சைவ சித்தாந்தத்தையும் மார்க்சியத்தையும் ஒத்துப்பார்த்ததில் இவ்விரண்டு தத்துவங்கள் கடவுள் நம்பிக்கையில் முற்றாக மாறுபடுகின்றன; மறுபிறப்புக் கொள்கையில் ஓரளவு வேறுபடுகின்றன; அறிவின் பயன் காண்பதிலும் வேறுபாடு இருக்கிறது; ஆனால் இந்த வேறுபாடுகள் மனித குல மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்வதில் பெரிய தடையாக இல்லை. சித்தாந்தச் சைவ மரபுப்படியான கடவுள் நம்பிக்கையால் உயிர்களின் நிலையான நலனுக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் யாதொரு தடையுமில்லை. சைவசித்தாந்தச் சமயத்தில் உள்ள கடவுள் தத்துவம் உயிர்க்குலத்திற்கு உறுதுணையாய் அமைந் திருக்கிறது. பிரிவினைகள், வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வுகள் முதலிய சமுதாயத் தீமைகளுக்கு சித்தாந்தச் சமயம் நேரிடை யாகவோ, மறைமுகமாவோ முற்றாக உடன்படவில்லை. ஆதலால், மானிட சமுதாயத்தை மேம்பாட்டைச் செய்யச் சித்தாந்தச் செந்நெறியின் தத்துவங்களுக்குச் செயலுருவம் கொடுத்தாலே போதும். புதுமையும் பொதுமையும் நிறைந்த சமுதாயத்தைக் காணலாம்.

சைவ சித்தாந்தம் புதுமைத் தன்மையுடையது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய் என்று மாணிக்க வாசகர் போற்றிய உரை, இன்றும் என்றும் சைவ சித்தாந்தச் செந்நெறிக்கும் பொருந்தும். இன்று வேண்டியதெல்லாம் செயற்பாடேயாம்.