ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 139
முழுமையான நிலையை எய்திடுதல் வேண்டும். அதாவது சிந்தனை நலம், புத்தியில் தூய்மை, மன நலம், புலன்களில் செம்மை, பொறிகளில் தூய்மை, உடல் நலத்திலும் உயிர் நலத்திலும் மிக்குயர்ந்த மேம்பாட்டு வாழ்க்கை ஆகியன தேவை. அப்பொழுது தான்் வளமான வாழ்க்கையைக் காண முடியும். வாழ்வு முன்னேற வேண்டுமானால் உடலுக்குள்ளே அமைந்த உயிர் அல்லது ஆன்மா, பூரண வளர்ச்சி பெற வேண்டும்.
ஆன்மா, நலம் எய்துவதற்காக எடுத்துக்கொண்ட சிறந்த கருவி உடம்பு, உடல், அகநிலைக் கருவிகளும் புறநிலைப் பொறிகளும் பொருத்தப் பெற்ற ஒரு சிறந்த இயங்கு கருவி உடல், பேணிக் காக்கப்பட வேண்டிய ஒன்று. எல்லா நலத்திற்கும் உடல் நலம் அடிப்படை. அதனால்தான்் திருமூலர் "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!” என்று அருளிச் செய்தார். உடம்பை வளர்த்தலாவது உடம்பின் பயன்பாட்டுத் திறனைப் பயன்படுத்துதல் மூலம் பெருக்கி வளர்த்துக் கொள்ளுதல் என்பதாகும். இன்று நம்முடைய மனிதகுலத்தின் மூளையாற்றல், உடலாற்றலில் பதினேழு விழுக்காடு கூடப் பயன்படுத்தப் பெறவில்லை என்று கூறுகின்றனர். வாழ்க்கையை ஓர் உயர் குறிக்கோளை நோக்கி மேலும், மேலும் புதிய புதிய வேலைகளை எடுத்துப் பயிற்றுவித்துக் கொண்டு முன்னேறுகிற பழக்கம் அருகியே காணப்படுகிறது. மூலப் பொருள்களுக்கானாலும் சரி, மனிதனுக்கானாலும் சரி, இயல்பில் மதிப்பு குறைவுதான்்! மனிதனின் ஆற்றலும் அறிவுத்திறனும் இயற்கை மூலப் பொருள்களோடு கொள்ளும் படைப்பாற்றல் மிக்க உறவின் மூலம் அப்பொருள்களுக்குப் பன் மடங்கு மதிப்பு உயர்கிறது: