பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் தி 153

சாபக்கேடுகள். ஆதலால், சீரோடும் சிறப்போடும் உடைய வளமான வாழ்வு காண, நல்லனவே எண்ணுவோம். உயிர்த் துடிப்புள்ள செயல்களை மேற்கொள்வோம். ஊழை நல்லூழாக்குவோம். அவ்வழி வளமான வாழ்வு அமையும்.

நுகர்தல், வாழ்க்கையின் இன்றியமையாச் செயற்பாடு களில் ஒன்று. உடம்பு, நுகர்வுக்குரிய பொறிகளோடும் புலன்களோடும் அமைந்திருக்கிறது. உணர்ச்சி வசப்படாமல் ஆசைகளின் வழிப்பட்டு அலைமோதாமல் நுகர்ந்து வாழ்தல் என்பது ஓர் இனிய கலை; வாழ்க்கைக் கலை.

"மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படும் வார்"

என்ற குறள் நுகர்தலின் செவ்விய திறனைப் புலப்படுத்து கிறது. ஐம்பொறிகளும் சுவைத்தற்குரிய பொறிகளேயாம். மனமாறுபாடின்றி, சுவைக்கப்படும் பொருளுக்குச் சேதமில்லாமல், நெறிமுறை பிறழாத நிலையில் சுவைத்தல் அறநெறி சார்ந்த நுகர்தலாகும். முறையான நுகர்வு உடல் நலம் தரும்; மனநலம் சேர்க்கும்; மகிழ்வைத் தரும்; அமைதியை நல்கும்; இன்பம் வந்தமையச் செய்யும். நுகர்வுக்குரிய பொறிகளை முறையாகப் பேணுதலும் நுகரத் தக்கனவற்றை நுகர்தலும் வளமான வாழ்க்கைக்குத் துணை செய்யும். நுகருமாறு நுகர்ந்து வளமான வாழ்வை காண்போமாக!

அழகு, நல்வாழ்க்கை வாழ்வோர் போற்றுபவைகளுள் தலையாயது. அழகு, ஐம்பொறிகளுக்கும் விருந்தாக அமைவது; குளுமையூட்டுவது; மகிழ்ச்சியைத் தருவது. “கைபுனைந்தியற்றாக் கவின் பொறுவனப்பு” என்று நக்கீரர் பாராட்டுவார். அழகை ஆராதனை செய்யாதவர் யார்?