பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ற அந்த மனிதப் புனிதன் ஜெர்மன் நாட்டின் வள்ளல் பெருமானாகவே, கருணையின் சிகரமாக, அன்பின் விளை நிலமாக, பண்பின் பெட்டகமாக ஆய்வின் விஞ்ஞானமாக, ஆற்றலின் மெய் ஞானமாக தனது கடைசிக் காலம் வரை வாழ்ந்து காட்டினார்.

உயர்வான விஞ்ஞானியும், உயர்வான சமய ஞானியும் ஒருவருக்கொருவர், ஒன்றுபட்டவரே தவிர, முரண்பட்டவர்கள் அல்லர் என்பதை நிரூபித்த கண்கண்ட விஞ்ஞானி அவர். அப்படி இருப்பவர்கள் அல்லது தொண்டாற்றுபவர்கள் இரண்டும் சேர்ந்த உணர்ச்சிகளின் இரு வேறு உருவங்களே என்பவையும் அவரது வாழ்வில் தோற்றமளித்து ஒளி வீசின.

அவர், இவ்வாறு ஒரு பண்பாட்டின் சிகரமாக வாழ்வதற்குரிய பின்புலக் காரணம் என்னவாக இருக்கும் என்பதும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

ஐன்ஸ்டைன் பிறந்த
காலச் சூழ்நிலை!

உலக வரலாற்றில் ஜெர்மன் நாடு அறிவுத் துறையிலும் சரி, கலைத்துறையிலும் சரி, கிரேக்க நாட்டைப் போல, குறிப்பாக ஏதென்ஸ் நாட்டின் நாகரிகம் போல சிறந்து விளங்கியதைக் காண்கிறோம். குறிப்பாக தெற்கு ஜெர்மன் நாடு உச்சகட்ட நாகரிக நாடாக இருந்தது எனலாம்.

தென் ஜெர்மன், புகழ்ச் செல்வர்கள் பலரைத் தோற்றுவித்த நாடு. இங்கே மதப் பூசல் கிடையாது, மனித இன வேறுபாடுகள் கிடையா. எங்கும் சமத்துவம், சகோதரத்துவம், ஆன்மீகத்துவம், செல்வத்துவம், ஒழுக்கத்துவம் ஒளி வீசி அமைதியான வாழ்க்கையிலே ஆனந்தமாக வாழ்த்துகொண்டிருக்கும் ஒருபகுதியாக விளங்கியது.