பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 □

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்



இத்தகைய கொடுமைகளுக்கு உட்பட்ட தெற்கு ஜெர்மன் நாட்டில், உல்ம் என்ற ஒரு சிறு கிராமத்தில், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் யூதர் இனத்திலே கி.பி. 1879-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதியன்று பிறந்தார். ஐன்ஸ்டைன் தந்தை பெயர் ஹெர்மன் ஐன்ஸ்டைன். தாய், பாலைன் ஐன்ஸ்டைன். இருவரின் செல்வ மகனாய் பிறந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

ஆல்பர்ட்டின் தந்தையாரான ஹெர்மன், அவரது உடன்பிறந்த தம்பியான ஜேக் என்பவரோடு இணைந்து மின்காந்தத் தொழிற்சாலை நடத்தி வந்தார். தனது மகனான ஆல்பர்ட்டை விருப்போடும், பொறுப்போடும், கருத்தோடும் வளர்த்துவந்தார். அந்தச்சிறிய வயதிலேயே ஆல்பர்ட் மின்காந்தக் கருவிகளை எவ்லாம் ஊன்றிக் கவனித்து தந்தை தொழிலிலே ஊக்கம் செலுத்தி வந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தாய் பாலைன் ஐன்ஸ்டைன் மகன் மீது அளப்பரிய அன்பு செலுத்திவந்தார். அவர் நகைச்சுவையோடு மகனிடம் பேசி அடிக்கடி சிரிக்க வைக்கும் கலையுணர்வு உள்ளவர்.

இசைக் கலையில் ஈடுபாடு கொண்ட பாலைன் ஐன்ஸ்டைன், வயலின் கருவியை வாசிப்பதில் வல்லவர். அதனால், தனது மகனுக்கு இசை நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார். ஐன்ஸ்டைனுக்கு ஒரு தங்கை. அவள் பெயர் மேயா! தனது ஒரே தங்கையிடம் ஆல்பர்ட் அன்போடும் உண்ர்வோடும் பழகி வந்தார். தங்கையைத் தனது உயிருக்குச் சமமாக எண்ணி அவர் இணைபிரியாமல் வளர்த்து வந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், இளம் வயதில் திக்குவாயராக தெத்தித் தெத்திப் பேசும் சுபாவம் கொண்டவர். கொஞ்சம் மந்தமாக எல்லா விஷயங்களிலும் ஆல்பர்ட் நடந்து கொண்டாலும், அவரை யாரும் வெறுக்காமல் விருப்போடு தான் பழகுவார்கள்.