பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 17

நல்லாசிரியர், வல்லாசிரியர் என்ற புகழையும் அடைந்தார்.

தனது பள்ளி நண்பரான மார்சல் என்பவரின் தந்தைக்கு அரசு செல்வாக்கு இருந்ததால், அவர் மூலமாக தனது தந்தையைக் கொண்டு பெர்ன் நகரிலிருத்தி பேடண்ட் என்ற பதிவுரிமை அலுவலகத்தில் 3000 பிராங்க் சம்பளம் பெறும் ஒரு விஞ்ஞானத் துணை அலுவலராகச் சேர்ந்து பணியாற்றினார். இந்தப் பணியை, அவர் பெரிதும் விரும்பினார்! காரணம், மேற்கொண்டு தனது அறிவியல் ஆய்வுப் பணிக்கு இந்த வேலையிலே, அதிக நேரம் ஓய்வு கிடைத்ததுதான்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மிகத் திறமைபெற்ற அறிவியல் ஆய்வாளராக புகழ் பெற்று வந்த போதும் கூட ஏதோ ஒரு துணை உதவியாளர் பணிதானே என்று அதைத் துச்சமாக மதியாமல் பெற்ற வேலையைப் பொறுப்போடு கவனித்து வந்த நிபுணராகத் திகழ்ந்தார்.

பாலிடெக்னிக் கல்விநிலையத்தில் பணியாற்றி வந்த ஐன்ஸ்டைனுக்கும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மிலிவா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு, 1902-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் புரிந்து கொண்டார்கள். வாழ்க்கை அமைதியாகவும் அன்பாகவும், சுவையாகவும் அமைந்து வாழ்ந்து வந்தார்கள்.

ஐன்ஸ்டைன் பணியாற்றி வந்த பதிவுரிமை அலுவலகத்தில், யார் யார் புதிய புதிய கண்டுபிடிப்புகளை தங்களது ஆய்வுகள் மூலமாகக் கண்டுபிடிக்கின்றனரோ அவர்களது கண்டு பிடிப்புப் புதுமைகளையும், நுணுக்கங்களையும், அதன் முழுவிவரங்களையும் அந்த அலுவலகமும் ஆராய்ந்து அவற்றின் தகுதிகளையும் பதிவுரிமை செய்வதுதான் அங்குள்ள இளம் விஞ்ஞானிகளின் வேலையாகும்.