பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 59

சக்தி உற்பத்தியில் அதிகமாக உற்பத்தியாவது யூரேனியம் போன்ற பொருட்களேயாகும். இதனால், சக்தியே பொருள், பொருளே சக்தி என்ற உண்மையை ஐன்ஸ்டைன் ஆராய்ச்சியால் உலகு உணர்ந்துள்ளது.

அணுசக்தி, அணுகுண்டாக மாறி, அண்டத்தில் அழிவுச்சக்திகளையே அதிகமாக உருவாக்கியதை அதை வெடித்ததால் உலகம் கண்டது. ஆனால், அழிவுச்சக்திக்கு மட்டும்தான் அணுகுண்டு பயன்படும் என்ற உண்மையையும் தகர்த்தெறிந்தது விஞ்ஞான உலகம்.

அணுசக்தி நாச வேலைக்கு மட்டும் அல்ல, ஆக்கப்பணிகளுக்கும் பயன் என்பதை மீண்டும் விஞ்ஞான உலகத்தில் ஆராய்ச்சி உலகுக்கு உணர்த்தியதையும் நாம் இன்று கண்டும், அனுபவித்தும் வருகின்றோம்.

அணுசக்தியை எந்த அளவுக்கு அதிகமாக மருத்துவ உலகம் பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அதைப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அதுபோலவே, பெளதிகத்துறையும் அணுச்சக்தியைப் பயன்படுத்திக் கொண்டு வருவதையும் பார்க்கின்றோம். இவை மட்டுமல்ல, அணுசக்தியை மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தும் ஆய்வுகள் வெற்றி பெற்றுள்ளன. E = c² என்ற விதி, கதிரியக்கப்பொருட்களின் தன்மையினையும், ஒளிதரும் பொருட்களின், அதாவது சூரியன், விண்மீன்களது தன்மைகளை விளக்கவும் பயன்படுகிறது. இதனால், சக்தியே பொருள், பொருளே சக்தி என்ற மகத்தான் ஆற்றலையும் நமக்கு தெளிவுறுத்துகின்றது.

எனவே, ஐன்ஸ்டைனின் ஆய்வால் நமக்குக் கிடைத்த சார்புநிலைக் கொள்கை, மக்களுக்கு கிடைத்த மகத்தான் ஒரு அணுசக்தியாகும். அந்த சக்தி நமக்கு விளைவித்து வரும் பயன்பாடுகளுக்குரிய ஈடுபாடுகளுக்கு நிகரே இல்லை என்று கூறலாம்.