பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 63


பொருள், சக்தி ஆகிய இரண்டினுடைய, ஒவ்வொன்றையும் அறிவியல் விதிகளை உருவாக்கியே விளக்குகிறார்.

புவி ஈர்ப்பு விசையும், மின்காந்த விசையும் தனித்தனியானவையாக இருப்பது இயற்கைக்கு மாறானது. இவை இரண்டும், ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்க வேண்டும் என்று எண்ணியே ஐன்ஸ்டைன் இக்கொள்கையை ஆராய்ந்தார்.

இந்தக் கொள்கைகளை விளக்கி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், கட்டுரை வடிவமாக எழுதினார். ஒரு கணக்குச் சூத்திரத்தைக் கொண்டு, புவிஈர்ப்பு, மின்காந்தக் கொள்கைத் தொடர்பான சமன்பாடுகளை விளக்கி, அவற்றின் வாயிலாக அறிவியல் முயற்சிகளை விதிகளாக வகுத்துக் காட்டமுடியும் என்று ஐன்ஸ்டைன் நம்பினார்! அதை இக்கட்டுரை மூலமாகச் செய்து காட்டினார்.

உண்மைகளும்-பொருள்களும் எவ்வாறு இயங்குகின்றன என்ற விவரத்தை இந்த கட்டுரை விளக்கவில்லை என்றாலும், பொருள்களுக்கும் உண்மைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளிகள் என்ன என்பதன் விளக்கமே இக் கட்டுரை நோக்கம்.

இணை பிரிக்க முடியாத புவிஈர்ப்பு விசையையும், மின் காந்த விசையையும் விளக்கும் விதிகளையே, இக்கொள்கையில் ஐன்ஸ்டைன் விளக்கி இருக்கிறார்.

‘ஒன்றிய புலக் கொள்கை’ எனப்படும் இந்தக் கொள்கையைப் பற்றி, அவர் மூச்சுள்ளவரை சிந்தித்தார். அதன் எல்லா விவரங்களையும் அக் கட்டுரையிலே அழகாக எழுதி வைத்த பின்பே அவர் காலத்தோடு ஒன்றி விட்டார். இன்றும் அக்கட்டுரையைப் படிக்கும் விஞ்ஞானிகள் புருவத்தை மேலேற்றி வியந்தவாறே உள்ளார்கள்.