உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

ஆழ்கடலில்


(பரிமேலழகர் உரை ) இல்வாழ்க்கையினின்று அதற்குரிய இயல்போடு கூடி வாழ்பவ னென்று சொல்லப்படுவான், புலன் களை விட முயல்வா ரெல்லாருள்ளும் மிக்கவன்.

(விளக்கவுரை) இக்குறளில் உள்ள 'இல்வாழ்க்கை வாழ்பவன்' என்னும் தொடர் ஓர் அரிய அணுத்தொடர் ஆகும். இத்தொடரில் இரண்டு முறை வாழ்(தல்) என்னும் சொல் வந்துள்ளது. இதற்கு வள்ளுவர் அகராதியில் என்ன பொருள்? கணவனும் மனைவியுமாய் இல்லில் இயைந்து வாழ்தலையே வாழ்தல் என வள்ளுவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இல்வாழ்க்கையே வாழ்க்கையாக அவர்க்குப் புலப்பட்டிருக்கிறது. மற்ற வாழ்க்கையெல்லாம், "வாழாது வாழ்கின்றேன்" என ஒரு காரணம் பற்றி ஓரிடத்தில் மணிவாசகர் கூறியிருப்பது போல், வாழாத வாழ்க்கையே போலும்! வள்ளுவர் 'வாழ்க்கைத் துணை நலம்' என்னும் பகுதியில், மனைவியை 'வாழ்க்கைத்துணை' எனக் கூறுகிறார். அங்ஙனமெனில், 'வாழ்க்கை என்பது எது? என நாமே உய்த்துணர்ந்து கொள்ளலாமே. இல்வாழ்க்கையே வாழும் வாழ்க்கை என்னும் கருத்தை உள்ளடக்கியே 'இல் வாழ்க்கை வாழ்பவன்' என இக்குறளில் ஆசிரியர் கூறினார். (வாழ்க்கையை வாழ்தல் - அதாவது வாழும் வாழ்க்கை).

இத்தொடரில் இன்னும் ஒரு நயங் காணலாம். 'எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்' என்பது போல இல்வாழ்க்கையில் உள்ள எல்லோருமே வாழ்ந்தவராகி விடுவார்களா? இல்லறமென்னும் நல்லறத்தைப் புல்லறமாக்கிக் கொண்டவர்கள் எத்துணையோ பேர்! 'கலியாணம் பண்ணியும் பிரமச்சாரி' என்றபடி, பேருக்குத் திருமணம் செய்து கொண்டு பேதுறுகின்ற பேதைப்பித்தர்கள் எத்துணையோ பேர்! இவர்களெல்லாம் இல்வாழ்க்கை வாழ்பவராக மாட்டார்கள். இல்வாழ்க்கை வாழவேண்டிய இயல்பின்படி வாழ்பவரே வாழ்வாராவர் என்ற