பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ஆழ்கடலில்


தம்மைப் புகழ்ந்து பேசுபவரை வீடுவரைக்கும் அழைத்துச் சென்று பாய் போட்டு அமரச் செய்து. சிற்றுண்டியும் நல்கி, விடிய விடிய விரிவாகத் தம் புகழைப் பேசச் சொல்லிக் கேட்டு மகிழ்வதென்றால் மக்களுக்கு விருப்பந்தான். ஆனால் அவரே ஏதேனும் ஒரு குற்றங்குறை சொல்லத்தொடங்கி விடுவாராயின், "சரி நல்லது போய்வருகிறீர்களா? என்று உடனே அவ்விடத்தை விட்டுக் கிளப்பிவிடுவார்கள். இஃது உலகியற்கை யன்றோ ? ஏன் இந்நிலை? தமது குறையைப் பிறர் சொன்னவுடனே கசப்புத் தோன்றிச் சினமாக மாறுகின்றது. அதனைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை. இது ஒரு பெரிய வலுக்குறை (பலவீனம்), இங்கே பொறுத்துக் கொள்ளுதல் என்றால் குற்றத்தை உணர்ந்து திருந்துதல் என்பது பொருள் ; அது மட்டுமன்று-தன் குற்றத்தை யுணர்ந்து தான் திருந்தும் விதத்தில் அக்குற்றத்தை எடுத்துக்காட்டியவருக்கு நன்றி செலுத்துதலும் ஆகும். தம்மிடம் உள்ள குறையைப் பிறர் சுட்டிக் காட்டியபோது, உணர்தலும், திருந்துதலும், நன்றி செலுத்துதலும் உயர்ந்த பண்பாடு. ஆதலினாலேயே "பொறுக்கும் பண்பு என்றார் ஆசிரியர். இஃது எல்லோர்க்கும் இயலாது என்பதைப் 'பொறுக்கும் பண்பு' என்னும் தொடர் அறிவிக்கவில்லையா? கூர்ந்து கவனியுங்கள்!

தாங்கள் பிறர்மேல் எவ்வளவு குற்றம் வேண்டுமானாலும் சொல்லலாம்; தங்கள் மேல் மட்டும் எவரும் எந்தக் குற்றமும் சொல்லக் கூடாது என்பதில் எளிய மக்களும் கண்டிப்பாய்க் கவனமாய்க் கண்ணுங் கருத்துமாய் இருக்கும் போது, நாடாளும் மன்னன் மேல் குற்றம் சொல்லலாமா? சொல்லத்தான் முடியுமா? சொன்னால்தான் விடுவானா? அவ்வாறு குறைசொல்ல விடுபவனே சிறந்த மன்னன், அவனது ஆட்சியே உண்மையான குடியரசு ஆட்சி- அவனது