பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
121
 

யாய் அலைவதாகச் சொல்வது தான் வழக்கம். ஆனால், நல்வாழ்வு வாழ்ந்து இறந்துபோன நல்லவரைக் குறிப்பிட்டுத் தான், "சும்மா சொல்லக்கூடாது; அவர் செத்துத் தெய்வமாய்ப் போய்விட்டாரு; அவர் எவ்வளவு பாடுபட்ட மனுழ்சன் தெரியுமா! அவர் மட்டும் இப்பொழுது இருந்திருந்தால் இது இப்படியா நடந்திருக்கும்? இந்நேரம் எவ்வளவோ மேல்நோக்கத்துக்குக் கொண்டுவந்திருப்பாரு" என்றெல்லாம் சொல்வது உலகியல். மக்களது பேச்சு வழக்கை இங்கே எழுத்துக்கு எழுத்து அப்படியே கொடுத்திருக்கிறேன். உண்மைதானே இது? இதே கருத்தைத்தான், "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்றார் திருவள்ளுவனார்,

எனவே, தெய்வநிலை யடைவதற்குரிய நேர்ப்பாதை வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் போலும்! தெய்வங்கள் எல்லாம் இப்படி மேல் வகுப்பு மாறி வந்தவைதாமோ? நம் திருக்கோவில்களுக்குள் நுழைவோமேயாயின், தெய்வங்களின் பட்டாளங்களைப் பரவலாகப் பார்க்கலாம். அவற்றையும் கூர்ந்து நோக்கின், ஆழ்வார்களாக. அல்லது நாயன்மார்களாக இருக்கக் காணலாம். அண்மைக் காலத்தில் மனிதர்களாக இருந்து பின் தெய்வமாக மாறிய இவை எல்லாம் 'ஜூனியர்' தெய்வங்கள் (பிந்தியவை) ஆகும், அவதார புருழ்சர்களாக வந்து தோன்றிய தெய்வங்கள் எல்லாம் 'சீனியர்' தெய்வங்கள் (முந்தியவை) ஆகும்.

இவையன்றி, இன்னும் இக்குறளின் உண்மைக்கு ஒரு சான்று தருவேன்:- உலகில் நல்லவரோ - கெட்டவரோ எவர் இறந்தாலும், 'சிவலோக பதவி யடைந்தார்' 'வைகுண்ட பதவி யடைந்தார்' என்று தானே 'கருமாதிப் பத்திரிகை' யில் அச்சிடுகின்றோம். இதிலுள்ள உண்மையாது? செத்தவரைத் தெய்வமாக மதிக்கிற உண்மைதான்.