பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124
ஆழ்கடலில்
 

அதற்கு, "அதோ கூரைமேல் ஏறிக் கொள்ளி வைக்கிறானே, அவன்தான் இருப்பவர்களுக்குள் நல்ல பிள்ளை" என்று வீட்டுக்காரர் பதில் சொன்னாராம். இதே கதைதான் இந்தக் குறளில் 'கள்ளைக் காட்டிலும் காமம் சிறந்தது' என்று சொல்லியிருப்பதும்! ஒரு தலைமகளைக் கண்டு, அவளது அழகுத் தோற்றத்தில் ஈடுபட்டுத் தன்னை மறந்து மகிழ்ச்சி கொள்கிற ஒரு தலைமகன் கூற்றாக வைத்து வள்ளுவர் வேடிக்கை செய்துள்ளார். அவ்வளவுதான்!

அவன் அவளது அழகுத் தோற்றத்தைக் காணுகிறான். அந்தக் காட்சியின்பத்தில் இரண்டறக் கலந்து திளைக்கிறான். இன்னும் அவளை நெருங்கவும் இல்லை; அவளோடு பேசவும் இல்லை; அவளைத் தொடவும் இல்லை. "கண்டதே காட்சி" என்றபடி. கண்ட அளவிலேயே காமச்சுவை நுகர்கிறான். கள் என்றால் இது கைவரப்பெறுமா? காசு கொடுக்கவேண்டும்! கலயத்தைக் கையில் எடுக்கவேண்டும்! 'கடகட' வென்று உள்ளே நெட்ட வேண்டும்! அதன் பின்னர்தான் ஆட்ட பாட்டமெல்லாம்! ஆனால் காமத்துக்கு அவ்வளவு வேண்டியதில்லையன்றோ? அதனால்தான், "காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று" என்றான் தலைமகன்.

தெரிகிறது தெரிகிறது! இந்தக் குறட் கருத்தை மறுப்பவரைப் பற்றிப் புரிகிறது புரிகிறது! "காமத்தைப் பற்றியாவது மனைவி மூலம் அறிந்திருப்பார்; கள்ளைப் பற்றி வள்ளுவர்க்கு என்ன தெரியும்? அதனை அவர் அருந்தி யறிந்திருக்க மாட்டார். அதனால்தான் இப்படி எழுதிவிட்டார் என்று. கள் கிடைக்காத காலத்திலேகிடைக்காத இடத்திலே, கள்ளைக் கண்டல்ல - கள்ளை எண்ணி யெண்ணிச் சொக்குபவர் கூறும் மதிப்புரை காற்றில் மிதந்து வருகிறது! இஃது என்ன சிக்கலாயிருகின்றதே!