பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
125
 

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக மக்கள் உலகத்தோடு --- உலகப் பொருள்களோடு தொடர்பு கொள்கின்றனர். நாம் உலகப்பொருள்களுள் சிலவற்றை மெய்யின் (தோலின்) மூலம் தொட்டுச் சுவைக்கிறோம்; சிலவற்றை வாயின் (நாக்கின்) மூலம் உண்டு சுவைக்கிறோம்; சிலவற்றைக் கண்ணின் மூலம் கண்டு சுவைக்கிறோம்; சிலவற்றை மூக்கின் மூலம் மோந்து சுவைக்கின்றோம்; சிலவற்றைச் செவியின் மூலம் கேட்டுச் சுவைக்கிறோம். இவற்றுள் எது மிக எளிது? எது மிக அரிது? இந்த வினாவுக்கு விடை கண்டு விட்டால் இந்தக் குறட் கருத்தின் சிக்கலை அவிழ்த்து விட்டவர்களாவோம். அது மட்டுமன்று; வேறு எத்தனையோ வகை இன்பப் பொருள்கள் இருக்க, இந்தக் குறளில் உணவுப்பொருளான கள்ளை எடுத்துக் கொண்டதின் காரணமும் விளங்கும்.

மேற்கூறிய ஐந்தனுள், கண்ணால் காணுவதன் மூலம் பொருள்களோடு தொடர்பு கொள்ளுதல் மிக எளிது - எதையும் எளிய முயற்சியில் கண்டுணர்ந்து கொள்ள முடியும், காணுதற்கு அவ்வளவு பெரிய கவனம் வேண்டுவதில்லை. இதனினும் காதால் கேட்டு உணர்வதற்கு மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும். இதனினும் மூக்கால் மோந்து உணர்வதற்கு இன்னும் மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும் - பொருளினிடம் முன்னைய இரண்டினும் மிகவும் நெருங்கவேண்டும், இதனினும் மெய்யால் - தோலறிவால் தொட்டு உணர்வதற்கு மேலும் மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும் - முன்னைய மூன்றினும் பொருளை மிகமிக அணுகி உடல் தொடர்பு - கொள்ளவேண்டும். இதனினும் வாயால் உண்டு தொடர்பு கொள்வதற்கு முயற்சியும் நெருக்கமும் மேலும் மிக மிக வேண்டும். உணவு உடலோடு இரண்டறக் கலந்துவிடுகிறது.