பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

127


விட, கண்டாரை மகிழச் செய்யும் காமம் உயர்ந்ததாகப் பேசப்பட்டுள்ளது. இதிலுள்ள உண்மை யாது?

பழைய தமிழ் நூலோர் காம இன்பத்தை, உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என இரண்டாகப் பிரித்துள்ளனர். "உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க் குரிய" என்பது நம்பியகப் பொருள் நூற்பா. உள்ளப் புணர்ச்சி என்பது கண்ட அளவில் மனத்தால் கூடுதல், மெய்யுறு புணர்ச்சி என்பது உடல் தொடர்பு. எனவே, காமம் என்பது கண்டார் கண்ணும் மகிழ்செய்யும் - கள்ளைப் போல உண்டார் கண்ணும் அதாவது உடலோடு தொடர்பு கொண்டார் கண்ணும் மகிழ்செய்யும். ஆகவே, உண்டார்கண் மட்டும் தொடர்பு கொள்ளும் கள்ளைவிட, கண்டார் கண்ணும் தொடர்பு கொள்ளும் காமம் உயர்ந்ததென அவன் புகழ்ந்துள்ளான். அவன் இப்பொழுதுதான் அவளை முதல் முதல் கண்டு காதலித்து உள்ளப் புணர்ச்சிக் கட்டத்தை அணுகியிருக்கிறான் அன்றோ? ஐந்து முயற்சிகளுள் எளிதான காணுதலைக் கொண்டே, ஐந்து முயற்சிகளுள் அரிதான உண்ணுதலுக்கு மேலே போய்விட்ட அவன், ஏன் சொல்ல மாட்டான் "உண்டார்கண் அல்லது அடு நறாக் காமம் போல் கண்டார் மகிழ்செய்த லின்று" என்று! "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள" எனப் பெரிய புராணத்தில் சேக்கிழார்கூட மொழிந்துள்ளாரே. ஆனால் அது பேரின்பத்துக்கு; இக்குறளோ சிற்றின்பத்துக்கு!