பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

129


(மணக்குடவர் உரை) கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க; கற்ற பின்பு அக்கல்விக்குத் தக வொழுகுக.

(பரிமேலழகர் உரை) ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க; அங்ஙனங் கற்றால் அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க.

(ஆராய்ச்சி விரிவுரை) கற்கவேண்டும். அதன்படி நிற்க வேண்டும், என்பது குறள். கல்வி என்னும் பெயரில் உலகில் மக்கள் செய்து கொண்டு வருவது என்ன? பல நூல்களை வைத்துப் படித்துக் கொண்டிருக்கின்றனர், நூல்கள் என்பன யாவை? பல அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து கண்ட முடிவுகளை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கின்றனர்; அந்த வாழ்க்கை யனுபவக் குறிப்புகளின் தொகுப்பைத்தான் நாம் நூல் (புத்தகம்) என்கின்றோம், அத்தகைய நூல்களைப் படிக்கின்றோம், ஏன் படிக்கின்றோம்? நாம் முட்டின்றி வாழ்வதற்காகப் படிக்கின்றோம். அந்த நூல்கள் நம் வாழ்க்கைக்கு எவ்வாறு துணை செய்கின்றன? முதல் முதலில் அமெரிக்கா சென்று வந்தவன், 'இப்படியிப்படிப் போக வேண்டும்; இப்படியிப்படி நடந்துகொள்ள வேண்டும்' என்று தன் அனுபவத்தை எழுதிவைத்தான். அதைப் படித்துவிட்டுச் செல்பவனுக்கு வழிப்பயணம் எளிதாகிறது. இந்த வழி காட்டி (Guide) வேலையைத்தான் முன்னோர் எழுதிவைத்த நூல்களும் செய்கின்றன. இவற்றைப் படித்துத்தானா தெரிந்து கொள்ள வேண்டும்? நாமே வாழ்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா? செய்யலாம்; ஆனால் காலமும் முயற்சியும் மிகவும் வீணாகும். வாழ்க்கையின் பூட்டுதிறப்புகளைத் தெரிந்துகொள்வதிலேயே காலங் கழிந்துவிடும். ஆக்க வேலைகளுக்குக் காலம் போதாது. முட்டின்றி வாழ்க்கை வாழமுடியாது. ஆகையால்தான் முன்னோர் நூல்களைக் கற்கவேண்டும்.