பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

ஆழ்கடலில்


ஒருவனுக்கு இப்போது வயது முப்பது. அவன் மூவாயிரம் ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்துள்ள நூல்களையெல்லாம் படித்திருக்கிறான் என்றால் அவனுக்கு இப்போது வயது வெற்று முப்பது அன்று; மூவாயிரத்து முப்பது (3000+300=3030) ஆகும்; அந்த நூல்களைப் படிக்காத எண்பது வயதுக்கிழவன் ஒருவன் இவனுக்கும் சிறியவனேயாவான். மூவாயிரத்து முப்பதுக்கும் வெற்று எண்பதுக்கும் எவ்வளவோ இடைவெளி இருக்கிறதல்லவா? இதனால்தான்,

"ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்"

எனப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றுப் பாடல் (183) ஒன்றில் கூறியிருக்கிறான் போலும்,

"கற்றான் இளமை பாராட்டும் உலக"

என்பது நான்மணிக்கடிகை.

எனவே, கற்றல் என்பது, எதிர்கால நல்வாழ்வுக்காக முன்கூட்டியே பெறும் பெரியதொரு பயிற்சியே என்பது விளங்கும். "பெற்றுள்ள சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னைப் பொருத்தி வாழக் கற்றுக்கொள்ளுதலே - பயிற்சி பெறுதலே கல்வியாகும்" - என்பது இக்காலக் கல்விக்கொள்கையின் முற்ற முடிந்த துணிபாகும். இதைத்தான் வள்ளுவர் "கற்க நிற்க" என அறிவிக்கின்றார். கற்பது எதற்காக? நிற்பதற்காகத்தான்! கற்றுவிட்டோமே என்பதற்காக நிற்பதில்லை. கல்வியின் நோக்கமே நிற்பதுதான்! நிற்றல் என்பது வாழவேண்டிய முறைப்படி வாழ்வதுதான்: வாழ்வதற்கு வழிகாட்டுவதுதானே கல்வி! அதனால்தான் "'கற்க நிற்க" என்றார் - ஆசிரியர்.