பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

ஆழ்கடலில்


பேசுகின்ற பேயர்களே! முக்கியமாய்த் தேர்வுக்கு வரக் கூடியது எது என்று பார்த்துக் கோடு கிழித்துப் படித்துத் தேர்வு எழுதிவிட்டு, தேர்வுத்தாள் திருத்துபவரைத் துரத்துகின்ற பித்தலாட்டப் பேடியர்களே! உங்களால் எல்லோருக்கும் கெட்ட பெயராம். எனவே, நீங்கள் இப்படிக் கற்றால் போதாது: பிழையற -- ஐயந்திரிபறக் கற்க வேண்டும், என்று சொல்ல விரும்பியவர்போல் 'கசடறக் கற்க' என்றார் ஆசிரியர், 'கல்வி என்பது பின்னால் பயனளிப்பது தான்' என்னும் கல்விக் கொள்கைக்கு அகச்சான்றாக, கற்றபின் நிற்க என்னும் தொடரிலுள்ள 'பின்' என்னும் ஒரு சொல்லே போதுமே! 'கற்றபின் அதற்குத்தக ஒழுகுக - அல்லது - நடக்க' என்று சொல்லாமல் 'நிற்க' என்றது ஏன்? ஒழுகுதலில் தளராத உறுதி வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவே 'நிற்க' என்றார். நிற்றல் என்றால் நிலையாய் நிற்றல்தானே! இந்தக் காலத்தில் என்னவோ கட்டாயக்கல்வி - கட்டாயக்கல்வி (Compulsory Education) என்கிறார்களே - இந்தக் கட்டாயத்தை. 'க' என்னும் விகுதி பெற்று விதித்தல் பொருளில் வந்துள்ள 'கற்க' 'நிற்க' என்னும் வியங்கோள் வினைமுற்றுக்கள் உணர்த்தி நிற்கும் நுண் பொருள் அழகினை நுனித்தறிந்து மகிழ்க! (வியங்கோள் வினை முற்றைப் பற்றியும், அதன் விதித்தற் பொருளைப் பற்றியும் இலக்கண நூலுள் கண்டு தெளிக)

மேலும், இந்தக் குறளில் இருபத்தேழு எழுத்துகள் உள்ளன. அவற்றுள் இருபத்து மூன்று எழுத்துகள் கடின ஓசையுடைய வல்லெழுத்துகள். இப்பொழுது இந்தக் குறளை இரண்டு மூன்று முறை படித்துப் பாருங்கள்! வள்ளுவர் மிகுந்த 'காரசார' உணர்ச்சியுடன் கல்வியைக் கட்டாயப் படுத்தியுள்ளார்! - மிகுந்த வல்லோசையுடன் வற்புறுத்தியுள்ளார். அவர் வல்லெழுத்துகளை மிகுதியாகச் சேர்க்கவேண்டும் என்று எண்ணியா சேர்த்தார்? இல்லை.