பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

133


அவரது உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சியின் ஊற்றமானது, அவரையறியாது ஊற்றெடுத்து வெளிப் போந்து விட்டது. இதுதான் இயற்கைப் புலவர்களின் இயல்பு. எனக்கு எப்படி இது தெரிந்தது? இந்தக் குறளைப் படித்ததுமே, இதற்கும் ஏனைய குறள்கட்குமுள்ள ஒலிவேற்றுமை விளங்கிவிட்டதே! இதற்காகத்தான், செய்யுட்களையெல்லாம் நன்கு வாய் விட்டுப் படிக்கவேண்டும்; திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க வேண்டும்!

எண்ணும் எழுத்தும்
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு"

(பதவுரை) எண் என்ப = எண்கள் என்று சொல்லப்படுவனவாகிய க, உ, ங, முதலானவும், ஏனை = மற்ற, எழுத்து என்ப = எழுத்துகள் என்று சொல்லப்படு வனவாகிய அ, ஆ, இ, ஈ. முதலானவும் ஆகிய, இவ்விரண்டும் - இந்த இருவகையாலான கல்விப் பொருள்களும், வாழும் உயிர்க்கு = வாழ்கின்ற மக்கள் உயிர்கட்கு, கண் என்ப = கண்களாம் என்று உண்மையுணர்ந்தவர் சொல்லுவர். (எண் = கணிதம்; ஏனை = மற்ற; எழுத்து = எழுத்தாலான நூற்கல்வி.)

(மணக்குடவர் உரை) எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.

(பரிமேலழகர் உரை) அறியாதார் எண்ணென்று சொல்லுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லுவனவு மாகிய கலைகளிரண்டனையும் அறிந்தார் சிறப்புடையுயிர் கட்குக் கண்ணென்று சொல்லுவர்.