பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அமைப்பு முறை ஆய்வு

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற வரிசையில் இப்பொழுது காணப்படும் திருக்குறளின் அமைப்பு முறையில் மாறுதல்செய்ய இடமிருக்கின்றது. இம்மூன்று பால்களையும் தன்னகத்துக் கொண்டிருப்பது காரணமாகத் திருக்குறள் பெற்றிருப்பதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கும் 'முப்பால்' என்னும் பெயரையே ஆட்டங் காணும்படிச் செய்யத் தெம்பிருக்கிறது.

காதில் விழுகிறது; சிறு சலசலப்பு அன்று; பெருங் கூக்குரல்கள்-அறை கூவல்கள் காதைத் துளைக்கின்றன. "பழைய சங்கப் புலவர்களே முப்பால்" என்று திருவள்ளுவ மாலையில் குறிப்பிட்டிருக்கின்றனரே. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் வரிசையில் உறுதிப்பொருள்களை உரைப்பதுதானே தொன்று தொட்ட முறை' என்றெல்லாம் பலர் போர் முழக்கம் இடுவது புரிகிறது.

பழைய சங்கப் புலவர்கள் சிலர் திருக்குறளுக்கு மதிப் புரை (விமர்சனம்) வழங்கியுள்ளனர். அவர்கள் எழுதிய பாக்களின் தொகுப்பாக, 'திருவள்ளுவ மாலை' என்னும் பெயரில் ஒரு நூல் உலவுவது பலர்க்கும் தெரிந்திருக்கலாம், அந்த நூலை நன்கு துருவிப் பார்க்கவேண்டும். 'அறம்' பொருளின்பம் முப்பால், 'அறம் பொருளின்பம் முப்பால்’ என இளமையிலிருந்து பார்த்துப் பார்த்துப் படித்துப் படித்துப் பழகிப்போன பழங்கண்களால் திருக்குறளையும் திருவள்ளுவ மாலையையும் பார்க்கக்கூடாது. ஆராய்ச்சி அறிவுக்கண் கொண்டு பார்க்கவேண்டும்-படிக்கவேண்டும். அப்பொழுது புரியும் திருக்குறளின் அமைப்பு முறை.