பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

141


பேசுவது வழக்கம். எனவே, குடும்பப்பெண் என்றால், அவளிடம் என்னென்னவோ நற்குண நற்செய்கைகளை மன்பதை (சமூகம்) எதிர்பார்க்கிறது. என்பது புலனாகும், 'நல்ல பெண்மணி' என்னும் தலைப்பில் இப்போது நாட்டில் ஒரு பாட்டுப் பாடுகின்றார்களே, அதன்படி ஒழுகினாலேயே கூட ஏறக்குறைய மனைத்தக்க மாண்புதான்.

அடுத்து 'தற்கொண்டான் வளத்தக்காள்' என்றால் என்ன? கணவனும் மனைவியுமாக வெளியூரில் தனிக்குடும்பம் செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். அங்கு மாமி இல்லை; மைத்துனி இல்லை; ஓரகத்தி இல்லை; ஊர்வம்புக்காரி ஒருத்தியுமே இல்லை. ஆயினும் அடிக்கடி இருவர்க்குள்ளும் இரும் பெரும் போராட்டம் நடக்கின்றது. அதற்குரிய காரணங்களுள் முதலிடம் பெறுவது. மனைவி விரும்பும் பொருள்கள் எல்லாம் வீட்டிற்கு வந்து சேராமையே! "அதனால்" அவள் கணவனை மதிப்பதில்லை - பணிவிடை செய்வதில்லை. வேலைகளையும் செவ்வனே செய்து முடிப்பதில்லை. செலவாளிகளாக இருக்கின்ற அண்டை வீட்டு ஆறுமுகத்தையும் எதிர் வீட்டு ஏகாம்பரத்தையும் எடுத்து ஈடு காட்டுகின்றாள். நீயும் ஓர் ஆண்மகனா என்று மானத்தை வாங்குகிறாள், குறைந்த வருவாயுடைய கணவன் என்ன செய்வான்? தன் எளிமையை வெளித் காட்ட வெட்கி, கடன் வாங்கியாவது தொலைக்கிறான், அதன் பிறகு, ஆகா! இத்தகைய கணவர் கிடைப்பாரா என்ற புகழ்மாலை வீட்டில்! வாங்கிய கடனைக் கொடுக்க வழியற்றவன் என்ற இகழ்மாலை நாட்டில்!

செலவானது வரவுக்கு மேற்படாமல் உட்பட்டிருக்குமானால், குறைந்த வருவாயினால் தாழ்வு ஒன்றும் இல்லை என்னும் கருத்தில், "ஆகு ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை போகு ஆறு அகலாக்கடை" எனத் திருவள்ளுவரே தெரிவித்துள்ளார் மற்றோரிடத்தில். எனவே, நூறு