உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

ஆழ்கடலில்


(யாதானும் - எதுவாயினும் - எந்த நாடும் -- எந்த ஊரும்; என் = என்ன -- என்ன காரணம்? சாம் துணையும் -- சாகும் துணையும்; துணை x இங்கே கால அளவு)

(மணக்குடவருரை) யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம்; ஆதலால் ஒருவன் சாந்தனையுங் கல்லா தொழுகுதல் யானைக் கருதி?

(பரிமேலழகருரை) கற்றவனுக்குத் தன்னாடுந் தன்னூருமேயன்றி யாதானுமொரு நாடும் நாடாம்; யாதானுமோரூரும் ஊராம்; இங்ஙனமாயின் ஒருவன் தானிறக்கு மளவுங் கல்லாது கழிகின்றது என் கருதி?

(ஆராய்ச்சியுரை) வள்ளுவர்க்குச் சினம் வந்து விட்டதாக இந்தக் குறளிலிருந்து தெரிகிறது. படிக்காதவனை அவரால் மன்னிக்க முடியவில்லை. ஏன் அவன் படிக்கவில்லை என்று கேட்கிறார். படிப்பினால் அவனுக்கு நன்மையே தவிரத் தீங்கொன்றுமில்லை என்று கூறுகிறார். நன்மை யென்றால் சிறிய நன்மையா? அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப்போல, படித்தவன் எங்கும் திகழலாம் என இனிப்புக் காட்டுகிறார்.

சிலர்க்கு இந்தக் குறளின் கருத்துப் புரிந்து செரிமானம் ஆவது அருமை. என்ன? படித்துவிட்டால் எந்த நாட்டுக்கும் போகலாமாம்- எந்த ஊருக்கும் போகலாமாம். இஃதென்ன விந்தை! எல்லா நாட்டுக்கும் எல்லா ஊருக்கும் படிப்பிருந்தால் தான் போகமுடியுமா? ஏன் பணமிருந்தால் எந்த நாட்டுக்கும் எந்த ஊருக்கும் போகமுடியாதா? எங்கே செல்லினும் நிரம்பப் பணம் கொடுப்பவனுக்கு முதல் வகுப்பும் முதல் மதிப்பும் கிடைக்குமா? அல்லது நிரம்பப் படித்தவனுக்குக் கிடைக்குமா? இஃதென்ன சிக்கல்?

பணக்காரன் பணத்தைச் செலவழித்துப் பெறுகின்ற நன்மைகளை யெல்லாம், படித்தவன் பணமின்றியே பெற்று