பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

15


வேறுபாடு? இயலின் உட்பிரிவாகிய அதிகாரத்திலும் வேறுபாடு காணக்கிடக்கின்றது. (அதிகாரம் என்பது, பத்துக் குறள்கள் கொண்ட ஒரு தலைப்பு). 'புதல்வரைப் பெறுதல்’ என்று சிலரும் அதனையே 'மக்கட்பேறு’ என்று சிலரும் கூறுகின்றனர். அதிகாரத்தின் வேறுபாட்டோடு, குறள்களின் வரிசையமைப்பிலும் பெரிய வேறுபாடு காணக்கிடக்கின்றது. மணக்குடவர், பரிதி, காலிங்கர், பரிமேலழகர் முதலியோர் உரைகளை எடுத்துப்பாருங்கள். ஒவ்வோர் அதிகாரத்திலும் குறள்களை எப்படி முன் பின்னாக ஒவ்வொருவரும் மாற்றியமைத்திருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அப்படியென்றால், திருவள்ளுவர் அமைத்த முறைதான் எது? ஏன் இத்தகைய மாறுதல்கள் ஏற்பட்டன? எப்படி ஏற்பட்டன? எவரால் ஏற்பட்டன? எப்போது ஏற்பட்டன? இதற்கு முடிவுகட்டித் தக்க விடையிறுப்பவர் எவர்? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

எனவேதான், "இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இந்நான்கும்" என நரிவெரூஉத் தலையார் கூறியாங்கு, யானும் ஈண்டு இன்பத்துப் பாலாகிய காமத்துப்பாலை முதலில் தொடங்கிக் கொள்கிறேன். அவ்வாறு தொடங்குவதிலோர் அழகு இருப்பது மட்டுமன்று: பொருத்தமும் இருக்கிறது.

இன்பத்திலே காதல் வாழ்வும், பொருளிலே அரசியலும், அறத்திலே அறநெறியும், வீட்டிலே கடவுள் நெறியும் பேசப்படுகின்றன. உளநூல் (Psychological) நியதிப்படி இது தான் இயற்கையான அமைப்பு முறையாகும். இந்த வரிசையில்தான் - இந்தப் படிகளில்தான் மனித உள்ளம் செல்லும் இயல்பினது. மேலும், சமூக வாழ்வியல் (Socialogical) நியதியின்படி நோக்கினும் இந்த வரிசையே