பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

173


களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவாள்.

(பரிமேலழகருரை) கற்பினின்றும் வழுவாமற்றன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றாற் பேணி, இருவர் மாட்டும் நன்மை யமைந்த புகழ் நீங்காமற் காத்து, மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளிலுங் கடைப்பிடி யுடையாளே பெண்ணாவாள்.

(விளக்கவுரை) முன்னர், இல்வாழ்க்கை என்னும் பகுதியின் முதற் குறனில், 'இயல்புடைய மூவர்க்கும்' என்பதற்கு இயல்பான உரிமையுடைய பெற்றோர், மனைவி, மக்கள் என்னும் மூவகையார்க்கும் - எனப்பொருள் எழுதினேன் நான். பின்னர், மூன்றாவதான 'தென்புலத்தார்' என்னும் குறளில், 'தான்' என்பதற்குக் கணவன் (குடும்பத் தலைவன்) எனப்பொருள் உரைத்தேன். 'தான்' என்பதிலேயே தன்னைச்சேர்ந்த மனைவி அடங்கிவிட மாட்டாளா? 'இயல் புடைய மூவர்' என்பதற்குள் அவளை அடக்க வேண்டுமா? அது பொருந்தாது - என என்னை மறுத்து நகையாடினர் சிலர். இங்கே இந்தக் குறளைக் கூர்ந்து நோக்க வேண்டுகிறேன், தன்னைக் காப்பதோடு தன் கணவனையும் காப்பது மனைவியின் கடமை எனத் தனித்தனியே பிரித்து இங்கே கூறியிருப்பது போலவே, அங்கேயும் தன்னைக் காப்பதோடு தன் மனைவியையும் காப்பது கணவன் கடமை என்னும் கருத்தை உட்கொண்டு, 'இயல்புடைய மூவர்' என்பதில் மனைவியை அடக்கி ஆசிரியர் கூறியிருக்கலா மல்லவா? மூவருள் மனைவிபோக ஏனைய பெற்றோரும் மக்களும் உதவிக்கொள்வதை 'மக்கட்பேறு' என்னும் அடுத்த பகுதியில் ஆசிரியர் அமைத்து வைத்துள்ள அழகினை ஆண்டறிந்து மகிழ்க!

இனி, பாயிரம் எனவும் வீட்டுப்பால் எனவும் வழங்கப் பெறும் பகுதியிலிருந்து சில முத்துகளைக் காண்பாம்.