பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

ஆழ்கடலில்


'கூறியது கூறினும் குற்றம் இல்லை
வேறொரு பொருளை விளைக்கு மாயின்'

என்பது சான்றோர் மொழியன்றோ? இங்கு வேறென்ன பொருளை விளைக்கின்றது எனின், விளம்புதும்: - செயற்கரிய செய்வர் பெரியர் என்பதை மட்டும் கூறி நிறுத்திவிட்டால், செய்யாதவர்கள் நடுத்தரமானவர்கள் என்ற பொருள் பட்டுவிடுமல்லவா? அங்ஙனம் படக்கூடாதென்பதற்காகவே, செய்யாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்று விளக்கிக் காட்டுகின்றார் ஆசிரியர். மேலும், சிறந்த செயல் ஒன்றும் செய்யாத சிலர் தம்மைப் பெருமையடித்துக் கொள்கின்றார்களல்லவா? அவர்களைச் சுட்டிக்காட்டி நீங்கள் தாழ்ந்தவர்களே என்று இடித்துரைப்பதாகவும் இஃது எண்ணக்கிடக்கின்ற தன்றோ?

(மண-உரை) செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர்; அவற்றைச் செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினும் சிறியோரென்று சொல்லுவர்.

(பரி - உரை) ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற் கெளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியார், அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.

ஐந்தின் வகை
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு.

(ப-ரை) உலகு -உலகமானது. சுவை-(உண்டுணரும்) சுவையும், ஒளி-(கண்டுணரும்) ஒளியும், ஊறு-(தொட்டால் உணரும்) ஊறும். ஓசை - (கேட்டுணரும்) ஒலியும், நாற்றம் -- (மோந்துணரும் வாசனையும், என்ற -- என்று சொல்லப் படுகின்ற, ஐந்தின் வகை -- ஐந்தின் திறத்தினை, தெரிவான்