பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

ஆழ்கடலில்


(ப-ரை) துப்பார்க்கு-உண்பவர்களுக்கு, துப்பு ஆய -- வலிமையான, துப்பு ஆக்கி - உணவுப் பொருள்களை உண்டாக்கியளித்து, துப்பார்க்கு -- அவ்வுணவுப் பொருள்களை உண்பவர்களுக்கு, துப்பு ஆயதூஉம் - (தானும் தாக வேட்கைக்கு) உணவாக ஆகியிருப்பதும், மழை -- மழை நீரே.

(தெ-ரை) துப்பு என்பதற்கு, உணவு, வலிமை என்பன பொருள். வலிமையைக் கொடுக்கும் உணவை வலிமையான உணவு (துப்பாய துப்பு) என்றார் ஆசிரியர்.

எவரிடமும் மண்ணைக் கொடுத்துத் தின்னு என்றால் தின்ன மாட்டார்கள். தண்ணீரைத் தந்து குடி என்றால் குடிப்பார்கள். ஆனால், மக்கள் யாவரும் மண்ணையும் தின்கின்றார்கள். எப்படியென்று நோக்குவோம்: நாம் உண்ணும் சோறு, காய் கனி முதலியன எப்படி உண்டாயின என்று ஆராயின், மண்ணும் தண்ணீரும் சேர்ந்தே உண்டாயின, என்பது அறுதியிட்டு உறுதி கட்டப்படும். அரிசியைத் தண்ணீருடன் கலந்து அப்பமாக்குகின்றாள் ஒரு மங்கை. அதுபோலவே, மண்ணைத் தண்ணீருடன் கலந்து உணவாக்குகின்றாள் இயற்கை யென்னும் நங்கை. ஆராய்ச்சியாளர்கள் உணவின் வகைகளாகக் கூறியுள்ள மாவுப் பொருள், கொழுப்புப்பொருள், உலோகப்பொருள் முதலிய யாவும் தண்ணீருடன் கலந்த மண்ணின் திரிவே. எனவே, தண்ணீர் தனித்து உணவாவதைப்போல மண் தனித்து உணவாகாது; அதற்குத் தண்ணீரின் உதவியும் தேவை என்பது இப்போது நன்கு புலப்படுமே! மண்ணையும், தண்ணீரையும் கொட்டினால் எரிகின்ற நெருப்பு அணையும். அதுபோல, மண் -- தண்ணீர்களின் திரிவாகிய உணவை உண்டால் பசித்தீ அணையும். இங்கு, "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்னும் புறநானூற்று வரியின் பொருத்தத்தை உற்று நோக்குங்கால், பண்டைத் தமிழனின் பலதுறை ஆராய்ச்சிவன்மை புலப்படும்.