பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
195
 

(பரி - உரை) இறைவன் அடியென்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம்.

நமது உரை: இறைவனடி சேராதார்--இறைவனின் திருவடிகளை வணங்காதவர்கள், பிறவிப் பெருங்கடல்--பிறவியாகிய பெரிய கடலை, நீந்துவர்-- நீந்திக்கொண்டேயிருப்பார்கள்; நீந்தார்--ஆனால் நீந்திக் கரையேற மாட்டார்கள்.

ஆய்வுரை: மணக்குடவர், பரிமேலழகர், பரிதியார், காலிங்கர் முதலான உரையாசிரியர்கள் பலரும் 'சேர்ந்தார்' என்னும் சொல் எச்சமாய் (குறைவாய்) உள்ளது எனக் கொண்டு அச்சொல்லை வருவித்துப் பொருள் கூறியுள்ளனர். இது தேவையில்லை. மேலே நமது உரையில் கூறியுள்ளதே பொருத்தமானது. இதற்குக் கம்பனது சுந்தரகாண்டச் சூடாமணிப் படலப்பாடல் ஒன்று துணை செய்கிறது: அது,

"நீந்தா இன்னலின் நீந்தாமே
தேய்ந்தா றாத பெருஞ்செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தோர்யார்" (43)

என்பது, நீந்த முடியாத துன்பக் கடலை நீ நீந்திக் கொண்டே யிராதபடி உன்னை இராமனிடம் சேர்க்க வேண்டும் என அனுமன் சீதைபால் கூறினான் - என்பது இதன் கருத்து. சீதை இராமனைப் பிரிந்து இராவணனிடம் அகப்பட்டுக் கொண்டு வருந்துவது, நீந்த முடியாத துன்பக் கடலை நீந்திக்கொண்டிருப்பதாகும். ஆனால், இராமனை அடையாவிடின், நீந்திக்கொண்டே தான் இருக்கவேண்டுமே தவிர, நீந்திக் கரையேற முடியாது - என்பது இதன் விளக்கம். இது போலவே, இறைவனடி சேராதார் பிறவிப்