பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆணிமுத்துகள்
19
 

காம உணர்வையும் எவராலும் ஒழிக்கவும் முடியாது. எந்தத் துறவியாயினும், மணமாகாத எந்த ஆண் பெண்ணாயினும் காம உணர்வை ஒழிக்கவே முடியாது. இதனை நான் நாற்பதாயிரங் கோவில்களில் சொல்லுவேன். இதனால், துறவியரையோ, மணமாகாதோரையோ நான் பழித்தவனல்லன். அவர்களுட் பலர் களங்க மிலாளர், மாசு மறுவற்றவர். அங்ஙனமெனின், இதில் பொதிந்து கிடக்கும் உண்மை யாது?

பசியை இனி வராதபடி ஒழிக்கமுடியாது; ஆனால் அடக்க முடியும். சினத்தை இனி எழாதபடி ஒழிக்கமுடியாது; ஆனால், வந்த சினத்தை அடக்கி வெல்ல முடியும். அதுபோலவே காமத்தையும் ஒழிக்கமுடியாது; அதனை அடக்கியாண்டு வெற்றிபெற முடியும். (ஒரு சில பேடிய ரிடத்தே இஃது ஒடுங்கி உறக்கத்திலாழ்ந்துள்ளது. இது விதிவிலக்கு, அதனாலேயே இது பசிக்கு அடுத்தபடி எனப்பட்டது.)

இவ்வுணர்ச்சிகள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு. இவற்றை உள நூலார் (Psychologist) ‘இயல்பூக்கங்கள்’ (Instincts) என்கின்றனர். இவை சூழ்நிலைவசத்தால் சிலரிடத்தே அடக்கமாகவும் சிலரிடத்தே முனைப்பாகவும், சில நேரத்தே அடக்கமாகவும் சில நேரத்தே முனைப்பாகவும் இருப்பதுண்டு. இவற்றை இவற்றின் போக்கிலேயே விட்டு விடாமல், நேரிய-தூய பாதையில் திருப்பிச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்வதைத்தான் “துய்மை செய்தல்” (Sublimation) என உளநூலார் குறிக்கின்றனர். இதைத்தான் கற்பிக்கின்றது திருக்குறள்.

பசியெடுத்தால் நமது உணவை உண்கின்றோம். பிறருணவை அவர் அறியாமல் அவர் விரும்பாமல் வலிய உண்பதை இழிவாகக் கருதுகிறோம். காமமும் அதுபோலவே